

பகுதி நேர ஆஃப் ஸ்பின்னர் நிதிஷ் ராணாவை ஏன் 4 ஓவர் வீச வைக்க வேண்டும், எங்கிருந்துதான் இப்படிப்பட்ட மூளையை அக்சர் படேல் பெற்றாரோ என்று கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கடுமையாகக் கிண்டலடித்துள்ளார்.
நேற்று சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான தோல்வியில் அக்சர் படேல் தான் 2 ஓவர்களையே வீசினார், குல்தீப் யாதவுக்கு 2 ஓவர்கள்தான் கொடுத்தார், ஆனால் பகுதி நேர ஸ்பின்னர் நிதிஷ் ராணாவுக்கு 4 ஓவர்களையும் கொடுத்து காமெடி பண்ணி விட்டார். ஏனெனில் நிதிஷ் ராணா 4 ஓவர்களில் 55 ரன்கள் விளாசப்பட்டார் என்பதே.
அதுவும் 15வது ஓவரில் நிதிஷ் ராணாவைக் கொண்டு வந்ததில் 23 ரன்கள் அந்த ஓவரில் விளாசப்பட்டது. குல்தீப்பும் தன் பங்குக்கு ஒரே ஓவரில் 22 ரன்கள் கொடுத்தார் என்பது வேறு விஷயம். ஆனால் குல்தீப் விக்கெட்டுகளை எடுக்கும் திறனுள்ளவர். அக்சர் படேல் தனக்கே 2 ஓவர்கள்தான் கொடுத்துக் கொண்டார் என்றால், நிதிஷ் ராணாவை 4 ஓவர்கள் வீசச் செய்தார் என்பதை என்னவென்று சொல்வது? இப்படிப்பட்ட முடிவுகள்தான் ஐபிஎல் மீதான சந்தேகங்களை பெரிதாகக் கிளப்புகிறது.
இந்நிலையில் ஆட்டம் முடிந்தவுடன் யூடியூப் சேனலில் பேசிய ஸ்ரீகாந்த், “அக்சர் படேல் டெல்லி கேப்டன், இந்திய டி20 அணியின் துணைக் கேப்டன். ஆனால் அவர் 2 ஓவர்தான் வீசினார். நிதிஷ் ராணா கிட்ட கொண்டு போய் பந்தைக் கொடுக்கிறார் அதுவும் அபிஷேக் சர்மா நன்றாக செட் ஆகியிருக்கும் போது. இப்படியெல்லாம் யோசிக்கும் மூளையை எங்கிருந்து பெற்றார் அக்சர் படேல்? பிறகு அணியில் இருக்கும் உத்தி வகுப்பாளர்கள், பகுப்பாய்வு செய்யும் குழுவுக்கு என்ன வேலை, அவர்களால் என்ன பயன்?
அக்சரும் குல்தீப் யாதவும் சர்வதேச பவுலர்கள், டி20 உலகக்கோப்பை வென்ற அணியில் ஆடியவர்கள். ஆனால் இருவரும் சேர்ந்தே 4 ஓவர்கள்தான் வீசியுள்ளனர். இப்படியிருக்க எங்கிருந்தோ நிதிஷ் ராணாவை திடீரென பவுலிங் போட அழைக்கிறார். அவர் 4 ஓவர்கள் வீசுகிறார். இதை எப்படி நியாயப்படுத்த முடியும்? இது பெரிய அபத்தம். இப்படிப்பட்ட நகர்வுகள்தான் அணியை மண்ணைக் கவ்வச் செய்கின்றன.
முதல்ல டாஸ் ஜெயிச்சு அடிதடி வீரர்கள் கொண்ட சன் ரைசர்ஸை முதல்ல பேட் செய்யச் சொன்னதே அபத்தம். கோடை கால சீசனில் சன் ரைசர்ஸிடம் மாம்பழத்தைக் கொடுத்தது போல் ஆனது இது. எந்த அணியாக இருந்தாலும் டாஸ் வென்று முதலில் பேட் செய்து நல்ல ஸ்கோரை எடுக்க வேண்டும். அதுதான் சரி.” என்றார் ஸ்ரீகாந்த்.