

ராகுல் திராவிட்
ஒருநாள், டி20, டெஸ்ட் என்று மூன்று வடிவங்களிலும் ஆடும் இந்திய வீரர்களுக்கு டெஸ்ட் போட்டிகளுக்கான தனித்திறமைகளை வளர்த்தெடுத்துக் கொள்ள போதுமான கால அவகாசம் கிடைப்பதில்லை என்று இந்திய முன்னாள் வீரரும் வெற்றிகரமான முன்னாள் தலைமைப் பயிற்சியாளருமான ராகுல் திராவிட் அருமையான ஒரு கருத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி சமீபமாக அடையும் தோல்விகளுக்கு இதுவே மிக மிக முக்கியமான காரணம் என்கிறார் ராகுல் திராவிட். ஏனெனில் 12 ஆண்டுகளாக உள்நாட்டில் டெஸ்ட் தொடர்களை இழக்காத இந்திய அணி சமீபமாக செம அடி வாங்கி வருகிறது.
இதற்கான காரணங்களை கம்பீர் போன்ற அரைகுறை டி20 பயிற்சியாளர் அலச முடியாது. வீரர்களை போட்டிக்குப் போட்டி மாற்றிக் கொண்டிருப்பார். திரைக்குப் பின்னால் என்ன செய்கிறார் என்ற வெளிப்படைத்தன்மை இவரிடம் கிடையாது.
ஆனால் ராகுல் திராவிட் அப்படியல்ல, எதையும் வெளிப்படையாக அதே வேளையில் ராஜ தந்திரத்துடன் வெளிப்படுத்துபவர். அவர் இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் பிரச்சினைகளுக்கு சிலபல காரணங்களைக் கூறியுள்ளார். பெங்களூருவில் “The Rise of the Hitman: The Rohit Sharma Story” என்ற நூலை அறிமுகப் படுத்தி அவர் கூறியதாவது:
“ஒரு பயிற்சியாளராக நான் புரிந்து கொள்வது என்னவெனில், குறிப்பாக 3 வடிவங்களிலும் ஆடும் இந்திய வீரர்கள் மாறி மாறி ஒருவடிவத்திலிருந்து இன்னொரு வடிவத்திற்கு தாவிக்கொண்டிருக்கிறார்கள். டெஸ்ட் போட்டிகளுக்கு முன்பாக நான்கைந்து நாட்கள் முன்பெல்லாம் டைம் இருக்கும். பிராக்டீஸ் செய்ய முடியும்.
இப்போது பாருங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முன்பாக சிகப்புப் பந்தில் இவர்கள் கடைசியாக ஆடியே 4 அல்லது 5 மாதங்கள் ஆகியிருக்கும். இது உண்மையில் பெரிய சவால். கடினமான திறமைகளை வளர்த்துக்கொள்ள இவர்களுக்கு ஏது நேரம்? எங்கே நேரம்? பந்துகள் திரும்பும் பிட்சிலோ, அல்லது ஸ்விங் ஆகும் கண்டிஷன்களிலோ டெஸ்ட் போட்டிகளில் மணிக்கணக்காக ஆடுவது என்பது சுலபமல்ல, அதற்குத் திறமை வேண்டும்.
எங்கள் தலைமுறையில் 2 வடிவங்கள்தான் ஆடப்பட்டு வந்தன. தனியார் கிரிக்கெட் என்ற ஒன்றே இருந்திருக்கவில்லை. மாதம் முழுக்க சிகப்புப் பந்தில் பயிற்சி எடுக்க அவகாசம் இருந்தது. அதனால் திறமைகளை வளர்த்தெடுத்துக் கொள்ள முடிந்தது. இப்போது நம் வீரர்கள் பலர் மூன்று வடிவங்களிலும் ஆடுவதால் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் தேவைப்படும் கடினமான திறமைகளை வளர்த்தெடுத்துக் கொள்ள போதிய அவகாசம் இல்லை.
ஷுப்மன் கில் இதைப் பற்றி பேசியுள்ளார். ஏனெனில் அவர்தான் இதன் சவால்களை அனுபவித்திருக்கிறார். டெஸ்ட் வடிவத்திற்கு அவர் தன்னைத் தயார்படுத்திக் கொள்ளக் கஷ்டப்படுகிறார்.
இப்போது டி20-யை எடுத்துக் கொள்ளுங்கள் இந்திய பேட்டர்கள் ஹிட்டிங் திறமைகளைப் பாருங்கள்... ஐபிஎல் தொடரில் இரண்டரை மாதம் எத்தனை சிக்சர்களை அடிப்பது என்பதையே பயிற்சி செய்து வருகின்றனர். அதனால் இந்த வடிவத்தில் சிறந்து விளங்குகின்றனர்.
இப்போதைய டெஸ்ட் போட்டிகள் கடினமாகிவிட்டன. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் வருகைக்குப் பிறகே ஒவ்வொரு பிட்சும் முடிவு வந்தேயாக வேண்டும் என்பது போல் அமைக்கப்படுகின்றன. முன்பெல்லாம் ஒரு அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை வென்றால் போதும் அவ்வளவுதான், ஆனால் இப்போது புள்ளிகள் தேவை என்பதால் ஒவ்வொரு டெஸ்ட்டையும் வெல்ல வேண்டும் என்று ஆடப்படுகிறது.
அதனால்தான் பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமான பிட்ச்கள் அமைக்கப்படுகின்றன, இத்தகைய போக்கு இந்தியாவில் மட்டுமல்ல மற்ற டெஸ்ட் நாடுகளிலும் கூட இப்படித்தான். நான் கோச் ஆக இருந்த காலத்திலேயே இதனை உணர்ந்திருக்கிறேன், புள்ளிகள் வேண்டும் என்னும் அழுத்தத்தில் ரிசல்ட் வரும் பிட்ச்களைக் கேட்போம். டெஸ்ட்டில் முடிவுகள் முக்கியம். குறிப்பாக உள்நாட்டில் ஆடும்போது முடிவுகள் முக்கியமானவை.” இவ்வாறு மனம் திறந்துள்ளார் ராகுல் திராவிட்.