‘GOAT’ சர் கேரி சோபர்ஸ் மறைவு - மே.இ.தீவுகள் லெஜண்ட்டின் வியத்தகு கிரிக்கெட் வாழ்க்கை!

‘GOAT’ சர் கேரி சோபர்ஸ் மறைவு - மே.இ.தீவுகள் லெஜண்ட்டின் வியத்தகு கிரிக்கெட் வாழ்க்கை!
Updated on
2 min read

zமேற்கிந்திய தீவுகளின் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் வரலாற்றின் மிகச் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவருமான சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் காலமானார். பார்படாஸில் உள்ள தனது இல்லத்தில் அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 89.

1936-ஆம் ஆண்டு பார்படாஸில் பிறந்த சோபர்ஸ், ஆறு குழந்தைகளில் ஐந்தாவது குழந்தை. இரண்டாம் உலகப் போரின்போது, 1942-ஆம் ஆண்டு அவரது தந்தை உயிரிழந்ததைத் தொடர்ந்து, தாயாரின் அரவணைப்பிலேயே அவர் பெரும்பாலும் வளர்ந்தார்.

சிறு வயதிலேயே பல்வேறு விளையாட்டுகளில் திறமை காட்டிய சோபர்ஸ், கூடைப்பந்து, கால்பந்து, கோல்ஃப் உள்ளிட்ட விளையாட்டுகளிலும் சிறந்து விளங்கினார். பிறக்கும்போதே இரு கைகளிலும் தலா ஆறு விரல்கள் இருந்த நிலையில், கூடுதலாக இருந்த விரல்கள் குழந்தைப் பருவத்திலேயே அகற்றப்பட்டன.

கிரிக்கெட் உலகில் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என மூன்று துறைகளிலும் அபாரமான திறமை கொண்ட வீரராக சோபர்ஸ் திகழ்ந்தார். இடது கை வேகப்பந்து வீச்சு மட்டுமின்றி, ஸ்பின் மற்றும் மணிக்கட்டு சுழற்பந்து வீச்சிலும் அவர் சிறந்து விளங்கினார். அருகமை பீல்டிங்கிலும் அவரது திறமை தனித்துவமானது.

சோபர்ஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் 8,032 ரன்களைக் குவித்தார். 93 போட்டிகள் மற்றும் 159 இன்னிங்ஸ்களில் விளையாடிய அவர், 57.78 என்ற சிறப்பான பேட்டிங் சராசரியுடன் இந்த ரன்களை எடுத்தார். இதில் 26 சதங்களும் 30 அரை சதங்களும் அடங்கும்.

அவரது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:

அதிகபட்ச ஸ்கோர்: 1958-ல் பாகிஸ்தானுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் எடுத்த 365 ரன்கள். இதுவே அவரது முதல் டெஸ்ட் சதமாகும். மேலும், இது 36 ஆண்டுகளுக்கு டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே தனிநபர் ஒருவரின் அதிகபட்ச ஸ்கோராகத் திகழ்ந்தது.

ஒரு ஜாம்பவான் ஆல்-ரவுண்டராகத் திகழ்ந்த இவர், 235 விக்கெட்டுகளையும் 109 கேட்சுகளையும் கைப்பற்றியுள்ளார். கவுண்ட்டி கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 6 சிக்சர்களை விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை நீண்ட காலம் வைத்திருந்தார் சோபர்ஸ். 1965 முதல் 1972 வரை 39 டெஸ்ட் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு கேப்டனாக இருந்த அவர், 9 வெற்றிகளையும் 10 தோல்விகளையும் சந்தித்தார்.

இதனால், கிரிக்கெட் வரலாற்றின் மற்றொரு மகத்தான வீரரான சர் டொனால்டு பிராட்மேன், சோபர்ஸை ஒருமுறை “ஒரே வீரருக்குள் ஐந்து திறமைகள் உண்டென்றால் அது கேரி சோபர்ஸ்தான்” என்று புகழ்ந்திருந்தார்.

கிரிக்கெட்டின் மிகச் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக மட்டுமல்லாமல், உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகவும் சோபர்ஸ் கருதப்படுகிறார். அவரது நினைவாகவே சர்வதேச கிரிக்கெட்டின் சிறந்த ஆண் வீரருக்கு வழங்கப்படும் ஐசிசியின் முக்கிய விருதான ‘சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் விருது’ பெயரிடப்பட்டுள்ளது.

16 வயதிலேயே முதல்தர கிரிக்கெட்டில் அறிமுகமான சோபர்ஸ், 1953-ஆம் ஆண்டு இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது தனது முதல் முதல்தரப் போட்டியில் விளையாடினார். அந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

அடுத்த ஆண்டே இங்கிலாந்துக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். ஆரம்ப காலத்தில் பந்துவீச்சாளராக அறியப்பட்ட சோபர்ஸ், பின்னர் உலக கிரிக்கெட்டின் மிகப்பெரிய பேட்டிங் சாதனைகளில் ஒன்றை படைத்தார்.

1958-ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 365 ரன்கள் விளாசிய அவர், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற லென் ஹட்டனின் சாதனையை முறியடித்தார். அந்த உலக சாதனை 1994ஆம் ஆண்டு பிரையன் லாரா அதை முறியடிக்கும் வரை நீடித்தது. லாரா அந்த சாதனையை முறியடித்தபோது, அதை நேரில் காணவும் கொண்டாடவும் சோபர்ஸ் அங்கு இருந்தார்.

சோபர்ஸின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் தலைவர் டாக்டர் கிஷோர் ஷாலோ, அவரை “உலகம் இதுவரை கண்ட மிகச் சிறந்த கிரிக்கெட்டர்” என்று புகழ்ந்துள்ளார்.

“ஒரு மக்களின் நம்பிக்கைகள், கனவுகள் மற்றும் அடையாளத்துடன் ஒருவரின் வாழ்க்கை பின்னிப் பிணையும் தருணங்கள் வரலாற்றில் அரிதாகவே நிகழும். இன்று கரீபிய உலகம் அத்தகைய ஒரு மாபெரும் மனிதரை இழந்துள்ளது.

பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் சோபர்ஸின் ஆளுமை ஒப்பிட முடியாதது. ஆனால், அவரது முக்கியத்துவம் கிரிக்கெட் மைதானத்தின் எல்லைகளைக் கடந்தது. அவர் ஒரு விளையாட்டு நட்சத்திரம் மட்டுமல்ல; கரீபியனின் திறமை, போராட்ட மனப்பான்மை மற்றும் கிரிக்கெட் வெற்றியின் அடையாளமாக மாறியவர்.

அவரது சாதனைகள் பார்பேடோஸுக்கு பெருமை சேர்த்தன. மேற்கிந்திய தீவுகளுக்கு உத்வேகம் அளித்தன. உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றன,” என்றார்.

கிரிக்கெட் உலகின் மிகப் பெரிய ஆல்ரவுண்டர்களில் ஒருவராகவும், மேற்கிந்திய தீவுகளின் பெருமைக்குரிய அடையாளமாகவும் திகழ்ந்த சர் கார்ஃபீல்ட் சோபர்ஸின் மறைவு, கிரிக்கெட் ரசிகர்களிடையேயும் முன்னாள் வீரர்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் தலைசிறந்த டெஸ்ட் லெவன் ஒன்றை முன்பொரு காலத்தில் தேர்வு செய்த கேரி சோபர்ஸ், அதில் தொடக்க வீரராக சுனில் கவாஸ்கரைச் சேர்த்திருந்தார். அதற்கு ஆஸ்திரேலிய ஜாம்பவான்களிடமிருந்து கொஞ்சம் விமர்சனம் வந்தது. அதாவது அப்போது பிரமாதமாக ஆடிக் கொண்டிருந்தவர் தென் ஆப்பிரிக்க லெஜண்ட் பாரி ரிச்சர்ட்ஸ்தான் அவர் இருக்க சுனில் கவாஸ்கரை எப்படி உங்கள் சிறந்த லெவனில் இடம்பெறச் செய்யலாம் என்று விமர்சித்தனர்.

ஆனால் அப்பொழுதே அவர்களுக்கு பதிலடி கொடுக்குமாறு கேரி சோபர்ஸ், ஓரு சிறந்த டெக்னிக் உள்ள பேட்டராக கவாஸ்கரின் அருமை பெருமைகளையெல்லாம் உலக அரங்கிற்கு எடுத்துரைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘GOAT’ சர் கேரி சோபர்ஸ் மறைவு - மே.இ.தீவுகள் லெஜண்ட்டின் வியத்தகு கிரிக்கெட் வாழ்க்கை!
1958 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பீலே அணிந்த ஜெர்சி ரூ.47 கோடிக்கு ஏலம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in