9.5 மணி நேரம் போராடி 202 ரன்கள் விளாசினார் ஜஸ்டின் கிரீவ்ஸ்: நியூஸி. டெஸ்டை டிரா செய்தது மே.இ.தீவுகள்

9.5 மணி நேரம் போராடி 202 ரன்கள் விளாசினார் ஜஸ்டின் கிரீவ்ஸ்: நியூஸி. டெஸ்டை டிரா செய்தது மே.இ.தீவுகள்
Updated on
2 min read

கிறைஸ்ட்சர்ச்: நியூஸிலாந்து - மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி​கள் இடையி​லான முதல் டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி கிறைஸ்ட்​சர்ச் நகரில் நடை​பெற்று வந்​தது. இதன் முதல் இன்​னிங்​ஸில் நியூஸிலாந்து அணி 231 ரன்​களும், மேற்கு இந்​தி​யத் தீவு​கள் 167 ரன்​களும் எடுத்​தன.

64 ரன்​கள் முன்​னிலை​யுடன் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய நியூஸிலாந்து அணி 109 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 466 ரன்​கள் குவித்து டிக்​ளேர் செய்​தது.

இதையடுத்து 531 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 4-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 74 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 212 ரன்​கள் எடுத்​தது. ஷாய் ஹோப் 116 ரன்​களும், ஜஸ்​டின் கிரீவ்ஸ் 55 ரன்​களும் சேர்த்து ஆட்​ட​மிழக்​காமல் களத்​தில் இருந்​தனர்.

நேற்று கடைசி நாள் ஆட்​டத்தை நியூஸிலாந்து அணி தொடர்ந்து விளை​யாடியது. ஷாய் ஹோப் 234 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 15 பவுண்​டரி​களு​டன் 140 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஜேக்​கப் டஃபி பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். 5-வது விக்​கெட்​டுக்கு ஷாய் ஹோப், ஜஸ்​டின் கிரீவ்ஸ் ஜோடி 384 பந்​துகளில், 196 ரன்​கள் சேர்த்​தது.

இதையடுத்து களமிறங்​கிய டெவின் இம்​லாக் 4 ரன்​களில் ஸாக் போஃக்ஸ் பந்​தில் எல்​பிடபிள்யூ ஆனார். 6-வது விக்​கெட்​டுக்கு களமிறங்​கிய கேமர் ரோச், ஜஸ்​டின் கிரீவ்​ஸுடன் இணைந்து அபார​மான ஆட்​டத்தை வெளிப்​படுத்​தி​னார். இந்த ஜோடி நியூஸிலாந்து அணி​யின் வெற்​றியை தடுத்து பந்து வீச்​சாளர்​களை கடுமை​யாக சோதித்​தது.

ஜஸ்​டின் கிரீவ்ஸ் 338 பந்​துகளில், 19 பவுண்​டரி​களு​டன் 202 ரன்​களும், கேமர் ரோச் 233 பந்​துகளில், 8 பவுண்​டரி​களு​டன் 58 ரன்​களும் விளாசி மிரளச் செய்​தனர். ஒரு வழி​யாக மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 163.3 ஓவர்​களில் 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 457 ரன்​களை எடுத்​திருந்த போது ஆட்​டத்தை டிரா​வில் முடித்​துக் கொள்ள நியூஸிலாந்து அணி சம்​மதம் தெரி​வித்​தது.

6-வது விக்​கெட்​டுக்கு ஜஸ்​டின் கிரீவ்​ஸ், கேமர் ரோச் ஜோடி 410 பந்​துகளை சந்​தித்து 180 ரன்​கள் எடுத்​தது. . மேலும் அந்த அணி​யின் பிர​தான பந்து வீச்​சாளர்​களான மேட் ஹென்​றி, நேதன் ஸ்மித் ஆகியோர் காயம் காரண​மாக பந்​து​வீச முடி​யாமல் போனது.

இதனால் அனுபவம் இல்​லாத ஸாக் போஃக்​ஸ், ஜேக்​கப் டஃபி மற்​றும் பகு​திநேர சுழற்​பந்து வீச்​சாளர்​களை கொண்டு சமாளித்​தது. இவர்​களால் எந்​த​வித தாக்​கத்​தை​யும் ஏற்​படுத்த முடி​யாமல் போனது. இது ஒரு​புறம் இருக்க கேமர் ரோச் 30 மற்​றும் 47 ரன்​களில் கொடுத்த கேட்ச்சை நியூஸிலாந்து அணி தவற​விட்​டது. இதற்​கான பலனை அந்த அணி அனுப​வித்​தது. மேலும் சில ரிவ்​யூக்​களை​யும் அந்த அணி வீணடித்து இருந்​தது.

1930-ம் ஆண்​டுக்கு பின்​னர் தற்​போது​தான் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 4-வது இன்​னிங்​ஸில் அதிக ஓவர்​களை (163.3 ஓவர்​கள்) விளை​யாடி உள்​ளது.

அதேவேளை​யில் டெஸ்ட் கிரிக்​கெட் வரலாற்​றில் 4-வது இன்​னிங்​ஸில் அதிக ரன்​கள் குவித்த 2-வது அணி என்ற பெரு​மை​யை​யும் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி பெற்​றுள்​ளது. ஜஸ்​டின் கிரீவ்ஸ் ஒட்​டுமொத்​த​மாக 9.5 மணி நேரம் களத்​தில் நின்று போராடி வரலாறு படைத்து ஆட்​டத்தை டிரா செய்து கொடுத்​துள்​ளார்.

ஒரு கட்​டத்​தில் 33 ஓவர்​கள் மீதம் இருந்த நிலை​யில் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி​யின் வெற்​றிக்கு 132 ரன்​கள் தேவை​யாக இருந்​தது. ஆனால் ஜஸ்​டின் கிரீவ்​ஸ், கேமர் ரோச் ஜோடி எந்​த​வித அவசர​மும் காட்​டா​மல் விக்​கெட்​களை இழந்​து​விடக்​கூ​டாது என்​ப​தில் கவனம் செலுத்தி பொறுமை​யாக விளை​யாடி ஆட்​டத்தை டிரா செய்​தது.

கேமர் ரோச் 53 ரன்​களில் இருந்த போது மைக்​கேல் பிரேஸ்​வெல் பந்​தில் இரு முறை ஆட்​ட​மிழப்​ப​தில் இருந்து தப்​பித்​தார். நூலிழை​யில் பந்து எட்ஜ் ஆகி விக்​கெட் கீப்​பரிடம் கேட்ச் ஆனது. ஆனால் நடு​வர் அவுட் கொடுக்​க​வில்​லை. நியூஸிலாந்து அணி​யிடம் ரிவ்​யூ இல்​லாத​தால்​ ஒன்​றும்​ செய்​ய முடி​யாமல்​ ​போனது.

9.5 மணி நேரம் போராடி 202 ரன்கள் விளாசினார் ஜஸ்டின் கிரீவ்ஸ்: நியூஸி. டெஸ்டை டிரா செய்தது மே.இ.தீவுகள்
பந்துவீச்சு, பேட்டிங்கில் அபாரம்: ஒருநாள் தொடரை வென்றது இந்தியா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in