

விசாகப்பட்டினம்: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது.
விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் நீக்கப்பட்டு திலக் வர்மா சேர்க்கப்பட்டார். தென் ஆப்பிரிக்க அணியில் காயம் அடைந்த நந்த்ரே பர்கர், டோனி டி ஸோர்ஸி ஆகியோருக்கு பதிலாக ஓட்னீல் பார்ட்மேன், ரியான் ரிக்கெல்டன் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 47.5 ஓவர்களில் 270 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தனது 23-வது சதத்தை விளாசிய தொடக்க வீரரான குயிண்டன் டி காக் 89 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 106 ரன்கள் விளாசினார். கேப்டன் தெம்பா பவுமா 48, மேத்யூ ப்ரீட்ஸ்கே 24, எய்டன் மார்க்ரம் 1, ரியான் கிரிக்கெல்டன் 0, டெவால்ட் பிரேவிஸ் 29, மார்கோ யான்சன் 17, கார்பின் போஷ் 9, லுங்கி நிகிடி 1, ஓட்னீல் பார்ட்மேன் 3 ரன்களில் ஆட்டமிழந்தனர். கேசவ் மஹாராஜ் 20 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா 4 விக்கெட்களை வீழ்த்தினர். அர்ஷ்தீப் சிங், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். தென் ஆப்பிரிக்க அணி ஒரு கட்டத்தில் 32 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 196 ரன்கள் குவித்து வலுவாக இருந்தது.
அப்போது அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த குயிண்டன் டி காக்கை, பிரசித் கிருஷ்ணா போல்டாக்கி திருப்பு முனையை ஏற்படுத்திக் கொடுத்தார்.
இதன் பின்னர் நெருக்கடி கொடுத்த டெவால்ட் பிரேவிஸ், மார்கோ யான்சன் ஆகியோரை குல்தீப் யாதவ் 39-வது ஓவரில் பெவிலியனுக்கு திருப்பினார். அப்போது தென் ஆப்பிரிக்க அணியின் ஸ்கோர் 38.3 ஓவர்களில் 235 ஆக இருந்தது. இதன் பின்னர் கார்பின் போஷையும் குல்தீப் யாதவ் எளிதாக வெளியேற்றினார். இதன் காரணமாகவே தென் ஆப்பிரிக்க அணியை 270 ரன்களுக்குள் கட்டுப்படுத்த முடிந்தது.
271 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய அணி 39.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 121 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 116 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். இது அவருக்கு முதல் சதமாக அமைந்தது. மற்றொரு தொடக்க வீரரான ரோஹித் சர்மா 73 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் எடுத்த நிலையில் கேசவ் மஹாராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். தனது 76-வது அரை சதத்தை கடந்த விராட் கோலி 45 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் விளாசி களத்தில் இருந்தார்.
9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது. முதல் ஆட்டத்தில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. ஆட்ட நாயகனாக ஜெய்ஸ்வால் தேர்வானார். தொடர் நாயகன் விருதை விராட் கோலி கைப்பற்றினார். அவர், இந்தத் தொடரில் 2 சதங்கள், ஒரு அரை சதத்துடன் 302 ரன்கள் குவித்திருந்தார்.