

டாக்கா: டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 7-ம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்குகிறது. 20 அணிகள் கலந்து கொள்ளும் இந்தத் தொடரில் வங்கதேச அணி ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. அந்த அணி பங்கேற்கும் லீக் ஆட்டங்கள் கொல்கத்தா, மும்பையில் நடைபெறுகின்றன.
இந்நிலையில் இந்தியாவில் தங்களது அணிக்கு பாதுகாப்பு இருக்காது என்றும் அதனால் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்தேசம் விளையாடும் போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என ஐசிசி-யிடம் வங்கதேச கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்தது. ஆனால் வங்கதேசத்தின் குற்றச்சாட்டு மீது எந்தவித உண்மையும் இல்லை. வங்கதேச அணிக்கு இந்தியாவில் எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என ஐசிசி தெரிவித்தது. ஆனால் டி 20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக இந்தியா செல்லமாட்டோம். எங்கள் அணி பங்கேற்கும் ஆட்டங்களை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
ஆனால் ஐசிசி தரப்பில் போட்டி தொடங்குவதற்கு சில வாரங்களே உள்ளதால் அட்டவணை, பயண விவரங்களை மாற்ற முடியாது என தெரிவிக்கப்பட்டது. மேலும் இன்றைக்குள் (21-ம் தேதி) டி 20 உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து முடிவு செய்து அறிவிக்க வேண்டும் எனவும் இல்லையென்றால் மாற்று அணியாக ஸ்காட்லாந்து சேர்க்கப்படும் எனவும் ஐசிசி தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் வங்கதேச அரசின் விளையாட்டுத் துறை ஆலோசகர் ஆசிஃப் நஸ்ருல் கூறும்போது, “டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்துக்குப் பதிலாக ஸ்காட்லாந்து மாற்று அணியாக சேர்க்கப்படுமா என்பது எனக்குத் தெரியவில்லை.
பிசிசிஐ தரும் அழுத்தத்தின் காரணமாக ஐசிசி எங்களுக்கு அழுத்தம் தர முயற்சித்தால் நாங்கள் அதற்கு அடிபணிய மாட்டோம். எந்த ஒரு காரணமுமின்றி ஐசிசி வைக்கும் நிபந்தனைகளை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
கடந்த காலங்களில் பாகிஸ்தான் அணி இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட மாட்டோம் எனக் கூறியதால், போட்டி நடத்தப்படும் இடங்களை ஐசிசி மாற்றியது. தர்க்கரீதியான அடிப்படையில் மைதானத்தை மாற்றுமாறு நாங்கள் கேட்டுள்ளோம், மேலும் நியாயமற்ற அழுத்தத்தைக் கொடுத்து இந்தியாவில் விளையாடுமாறு எங்களை வற்புறுத்த முடியாது” என்றார்.