

ஹர்திக் பாண்டியா
மும்பை: “நாங்கள் ஓர் அணியாக ஆட்டத்தை இழந்தோம். தோல்விக்கு பவுலர்கள் தான் காரணம் என பழி சொல்ல மாட்டேன்” என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் ஐந்து முறை பட்டம் வென்ற அணிகளில் ஒன்று மும்பை இந்தியன்ஸ் அணி. இருப்பினும் நடப்பு ஐபிஎல் சீசனில் 8 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி, இரண்டு வெற்றிகளை மட்டுமே பதிவு செய்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹோம் கிரவுண்டான வான்கடேவில் தொடர்ந்து நான்கு ஆட்டங்களில் தோல்வியை தழுவி உள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக புதன்கிழமை (ஏப்.29) நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 243 ரன்கள் சேர்த்தது. 244 ரன்கள் இலக்கை விரட்டிய சன்ரைசர்ஸ் அணி, 18.4 ஓவர்களில் இலக்கை எட்டியது. ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட பெரிய இலக்குகளில் ஒன்றாக இது அமைந்தது.
“நான் எங்கள் அணியின் பவுலர்கள் மீது பழி சொல்ல மாட்டேன். ஓர் அணியாக நாங்கள் ஆட்டத்தை இழந்தோம் என நினைக்கிறேன். மும்பை இந்தியன்ஸ் என்ற பெயருக்கு ஏற்ப நாங்கள் செயல்படவில்லை. கிடைக்கும் அதிர்ஷ்டத்தை பற்றிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் வெற்றி தருணத்துக்கு திரும்ப முடியும். அதை செய்ய தவறினால் அது ஏமாற்றம் தரும். இருப்பினும் அதற்காக எங்கள் வீரர்கள் முயற்சித்தார்கள் என்பதை நேர்மறையாக பார்க்கிறோம்” என்று சன்ரைசர்ஸ் உடனான ஆட்டத்தில் தோல்வியடைந்த பின்னர் ஹர்திக் பாண்டியா தெரிவித்தார்.