

பெங்களூரு: ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி தனது முதல் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து நடப்பு சீசனை வெற்றிகரமாக தொடங்கியிருந்தது. அந்த அணி தனது அடுத்த ஆட்டத்தில் வரும் 5-ம் தேதி சிஎஸ்கே அணியுடன் மோத உள்ளது.
இந்நிலையில் ஆர்சிபி அணியின் ஆல்ரவுண்டரான கிருணல் பாண்டியா கூறியதாவது: இந்த ஆண்டு அணியில் அதிக அமைதியான சூழல் இருப்பதாக நான் உணர்கிறேன். கடந்த ஆண்டு இது ஒரு புதிய அணியாக இருந்தது. மேலும் அனைவரும் ஒருவரைப் பற்றி ஒருவர் தெரிந்துகொள்ள வேண்டியிருந்தது.
இந்த ஆண்டு பல வீரர்கள் தங்களது பொறுப்புகளையும் மற்றும் தங்களின் பலம், பலவீனங்களையும் நன்றாகப் புரிந்துகொண்டுள்ளனர் போட்டியின் போது பெரிய தருணங்களை நான் எதிர்கொள்ளும்போது, கடவுள் நம்மை இங்கு கொண்டு வந்திருக்கிறார் என்றால் அதற்குப் பின்னால் ஒரு காரணம் இருக்கும் என்று நம்புவேன்.
சில நேரங்களில் இந்த பெரிய தருணங்கள் எனக்காகவே உருவாக்கப்பட்டவை என்று நான் நினைப்பதுண்டு. நான் அழுத்தத்தை உணர்கிறேன், ஆனால் அந்த தருணத்தில் நான் எப்படி அமைதியாகவும், கவனமாகவும் இருந்து அணிக்கு என்ன தேவை, அதை எப்படி செய்ய முடியும் என்பதைப் பற்றி மட்டுமே சிந்திப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.