

துபாய்: ஒருநாள் கிரிக்கெட் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் சீனியர் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார்.
வதோதராவில் நியூஸிலாந்துக்கு எதிராக நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 93 ரன்களை விளாசியதன் மூலம் 37 வயதான விராட் கோலி, தரவரிசையில் 785 புள்ளிகளுடன் ஓர் இடம் முன்னேறி முதலிடத்தை பிடித்துள்ளார்.
கடைசியாக விராட் கோலி கடந்த 2021-ம் ஆண்டு ஜூலையில் முதலிடத்தில் இருந்தார். தற்போது 4 வருடங்களுக்கு பிறகு மீண்டும் முதலிடத்தை அடைந்துள்ளார். அதேவேளையில் முன்னாள் கேப்டனான ரோஹித் சர்மா முதலிடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அவர், 775 புள்ளிகளுடன் உள்ளார். 3-வது இடத்தில் இருந்த நியூஸிலாந்து அணியின் டேரில் மிட்செல் ஓர் இடம் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார். அவர், இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 84 ரன்கள் எடுத்திருந்தார்.