

உயிரிழந்த சஞ்சுகுமார் ஹொசமணி
பெங்களூரு: கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டத்தில் உள்ள தாலமடகியை சேர்ந்தவர் சஞ்சுகுமார் ஹொசமணி (48). இவர் நேற்று சங்கராந்திக்கு தனது மகளை சந்திப்பதற்காக தாலமடகி பாலம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது பட்டத்தின் மாஞ்சா நூல் சஞ்சுகுமாரின் கழுத்தில் சிக்கிக் கொண்டதில் அவர் கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறியது.
உடனே அவர் தனது மகளை செல்போனில் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தார். மேலும் அவராகவே ஆம்புலன்ஸை தொடர்புகொள்ள முயற்சிக்கும்போது மயங்கி விழுந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
அப்போது வாகன ஓட்டி ஒருவர் அவரது கழுத்தில் துணியை வைத்து, ரத்தம் வெளியேறுவதை தடுக்க முயற்சிக்கிறார். எனினும் ஆம்புலன்ஸ் வருவதற்குள் சஞ்சுகுமார் உயிரிழந்தார். இதுகுறித்து தாலமடகி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இதுகுறித்து அவரது உறவினர்கள் கூறுகையில், “ஆம்புலன்ஸ் சற்று முன்னதாக வந்திருந்தால் சஞ்சுகுமாரை காப்பாற்றி இருக்கலாம். ஆபத்தான மாஞ்சா நூல் மூலம் உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது. இதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.