

விராட் கோலியிடம் டெஸ்ட் கிரிக்கெட்டில் பங்களிப்பு செய்ய இன்னும் கிரிக்கெட் திறமை மீதமிருக்கும்போது கோபத்தினால் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றிருக்கக் கூடாது என்று லெஜண்ட் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பைத் தோல்விக்குப் பிறகே முகமது ஷமியை விஷமிகள் சிலர் ட்ரோல் செய்து கோபாவேசத்தையும் விஷத்தையும் கக்க, அதனை கோலி கடுமையாக எதிர்த்தார். ஷமிக்கு தன் முழு ஆதரவையும் தெரிவித்ததால் கோலி சில சக்திகளிடமிருந்து எதிர்ப்பை எதிர்கொள்ள நேரிட்டது. அப்போது டி20 கேப்டன்சியைத் துறந்தார், அடுத்து ஒருநாள் கேப்டன்சியையும் துறந்த கோலி பிறகு கடும் கோபத்தினால் டெஸ்ட் கேப்டன்சியையும் துறந்தார். இதைத்தான் கபில் இப்போது சுட்டிக்காட்டிப் பேசியுள்ளார்.
ஸ்போர்ட்ஸ் தக் பாட்காஸ்டில் கபில் தேவ் கூறியதாவது:
"இது 10,000 ரன்கள் பற்றிய விஷயம் அல்ல. ஆறு மாதங்களுக்கு அவர் தனது கோபத்தால் ஆட்கொள்ளப்படாமல் இருந்து, இந்தியாவுக்காக மீண்டும் விளையாடுவதற்கு இன்னொரு வாய்ப்பைத் தன்னுக்குத் தானே ஏற்படுத்திக் கொண்டிருக்கலாம் என்று நான் நினைத்தேன். ஏனெனில், ஒருமுறை நீங்கள் இந்தியாவுக்காக விளையாடுவதை நிறுத்திவிட்டால், அந்த வாய்ப்பு மீண்டும் கிடைப்பது மிகவும் அரிது. அதன் பிறகு அதைப் பற்றி பேச மட்டுமே முடியும்."
அவருக்கு அவருடைய கருத்துக்கள் இருந்திருக்கும்; அதைச் செய்ய அவருக்கு முழு உரிமையும் உள்ளது ஆனால் வெளியில் இருந்து பார்க்கும் நமக்குத் தோன்றுவது என்னவென்றால், அவருக்கு இன்னும் கால அவகாசம் இருந்தது. தேர்வாளர்கள் உங்களைத் தேர்ந்தெடுக்கவில்லை என்றால் பரவாயில்லை. உங்களுக்கே சிறிது நேரம் கொடுங்கள்.
கேப்டன் உங்களை அணியில் சேர்க்கவில்லை என்றாலும் பரவாயில்லை. கடினமாக உழைத்து மேலும் ரன்கள் குவியுங்கள். மோகிந்தர் அமர்நாத், அன்ஷுமன் கெய்க்வாட் போன்றவர்கள் அப்படித்தான் செய்தார்கள். அவர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் மீண்டும் ரன்கள் குவித்து தேசிய அணிக்குத் திரும்பினர்.
"நீங்கள் ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடுவது போலவே, மற்ற தொடர்களிலும் சிறப்பாக விளையாடினால் மீண்டும் வாய்ப்பு கிடைக்கும். ஏனெனில், அவருக்கு இன்னும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் திறன் இருக்கிறது. அந்த திறன் இல்லாமல் போய்விட்டது என்று சொல்ல முடியாது. இப்போதும் அவரைப் பார்த்தால் அவர் விளையாட முடியும் என்று தோன்றுகிறது. ஆனால் அவர் அந்த முடிவை எடுத்துவிட்டார். அவர் நேரம் வருவதற்கு முன்பே அந்த முடிவை எடுத்துவிட்டார் என்று நினைத்ததால் எனக்கு சிறிது ஏமாற்றமாக இருந்தது."
ஆனால் நான் விராட் கோலியைப் பார்க்கும்போது, அவர் எனக்கு ஜான் மெக்கென்ரோவை நினைவுபடுத்துகிறார். ஏனெனில், அவர் கோபத்துடன் இருந்தால்தான் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்று நம்புபவர். ஆனால் நான் அப்படிப்பட்டவன் இல்லை."
"விராட்டைப் பார்க்கும்போதும் சில நேரங்களில், ‘அவர் கொஞ்சம் அமைதியாக இருக்க வேண்டும், சற்றுத் தளர்வாக அணுக வேண்டும்’ என்று தோன்றும். ஆனால் அந்த ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவதுதான் தனது ஆட்டத்தை மேலும் சிறப்பாக்குகிறது என்று அவர் உணர்ந்தால், அதில் என்ன தவறு இருக்கிறது?" என்றார் கபில்தேவ்.