

பெங்களூரு: டி20 கிரிக்கெட் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் (ஆர்சிபி) விராட் கோலி விரைவில் 14 ஆயிரம் ரன்களை எட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 18 ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளில் பெங்களூரு அணிக்காக விராட் கோலி விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் முதன்முறையாக பெங்களூரு அணி கோப்பையை வென்றிருந்தது.
அவர் இதுவரை ஐபிஎல் போட்டியில் 267 ஆட்டங்களில் பங்கேற்று 8,661 ரன்களைக் குவித்துள்ளார். இதில் 63 அரை சதங்கள் அடங்கும். மேலும் 339 ரன்கள் சேர்த்தால் ஐபிஎல் போட்டிகளில் 9 ஆயிரம் ரன்களைக் குவிக்கும் முதல் வீரர் என்ற பெருமையைப் பெறுவார். ஐபிஎல், சாம்பியன் லீக் டி20 போட்டிகள் என 282 ஆட்டங்களில் ஆர்சிபி அணிக்காக பங்கேற்று மொத்தம் 9,085 ரன்களைக் குவித்துள்ளார் விராட்.
இன்னும் 2 சீசன்களில் அவர் விளையாடும்போது ஒரே ஒரு அணிக்காக 10 ஆயிரம் ரன்களை குவிக்கும் முதல் வீரர் என்ற பெருமையைப் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 414 டி20 போட்டிகளில் (ஐபிஎல், சாம்பியன்ஸ் லீக் டி20, சர்வதேச டி20 என அனைத்தும் சேர்த்து) விளையாடி 13,543 ரன்களை விராட் கோலி எடுத்துள்ளார்.
வரும் சீசனில் விளையாடும்போது அவர் விரைவில் 14 ஆயிரம் ரன்களை எட்ட வாய்ப்புள்ளது. அவ்வாறு அவர் 14 ஆயிரம் ரன்களை எட்டினால் டி20 போட்டிகளில் 14 ஆயிரம் ரன்கள் குவித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெறுவார்.
மேற்கு இந்தியத் தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெயில் 14,652 ரன்களுடன் முதலிடத்திலும், கைரன் பொல்லார்ட் 14,482 ரன்களுடன் 2-வது இடத்திலும், இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ் 14,449 ரன்களுடன் 3-வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 14,028 ரன்களுடன் 4-வது இடத்திலும் உள்ளனர். கடந்த 2025-ம் ஆண்டு சீசனில் விராட் கோலி 15 ஆட்டங்களில் விளையாடி 757 ரன்கள் குவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 8 அரை சதங்களும் அடங்கும்.