

லக்னோ: சர்வதேச டி20 கிரிக்கெட் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்ரவர்த்தி 818 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார்.
தரவரிசையில் வருண் சக்ரவர்த்தி அதிக புள்ளிகளை பெறுவது இதுவே முதன்முறையாகும். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று வரும் டி 20 தொடரில் முதல் 3 ஆட்டங்களிலும் வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். இதன் காரணமாக அவர், தரவரிசையில் அதிக புள்ளிகளை பெற்றுள்ளார்.
நியூஸிலாந்தின் ஜேக்கப் டஃபி 699 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். வருண் சக்ரவர்த்திக்கும் ஜேக்கப் டஃபிக்கும் இடையே 119 புள்ளிகள் வித்தியாசம் உள்ளது. வருண் சக்ரவர்த்தி ஏற்கெனவே டி 20 பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் டாப் 10-ல் அதிக புள்ளிகளை பெற்ற வீரர் என்ற சாதனையும் படைத்திருந்தார்.
இந்திய வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் 4 இடங்கள் முன்னேறி 16-வது இடத்தை பிடித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் அர்ஷ்தீப் சிங் ஆட்ட நாயகன் வென்றிருந்தார். தென் ஆப்பிரிக்க அணியில் மார்கோ யான்சன் 14 இடங்கள் முன்னேறி 25-வது இடத்தையும், லுங்கி நிகிடி 11 இடங்கள் முன்னேறி 44-வது இடத்தையும் எட்டி உள்ளனர். அதேவேளையில் ஓட்னீல் பார்ட்மேன் 100-வது இடத்தில் இருந்து 68-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.
டி20 பேட்டிங் தரவரிசையில் இந்திய அணியின் தொடக்க வீரரான அபிஷேக் சர்மா முதலிடத்தில் தொடர்கிறார். திலக் வர்மா 2 இடங்கள் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவின் எய்டன் மார்க்ரம் 8 இடங்கள் முன்னேறி 29-வது இடத்தையும், குயிண்டன் டி காக் 14 இடங்கள் முன்னேறி 43-வது இடத்தையும் அடைந்துள்ளனர்.