

ஆஸ்திரேலியாவுக்காக 2011-ம் ஆண்டு முதல் 2025 ஆஷஸ் தொடர் பெர்த் டெஸ்ட் வரை ஆடிய உஸ்மான் கவாஜா அடிலெய்ட் டெஸ்டுக்கான ஆஸ்திரேலிய லெவனில் இல்லை.
டிராவிஸ் ஹெட், ஜேக் வெதரால்ட் ஓப்பனிங் ஜோடி நன்றாகவே ஆடி வருவதால் கவாஜாவுக்கான இடம் அங்கு இல்லை. அடிலெய்ட் டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக பாட் கமின்ஸ் திரும்பியுள்ளார். நேதன் லயன் வந்துள்ளார். ஜாஷ் இங்லிஸ் தன் இடத்தைத் தக்கவைத்துள்ளார், உஸ்மான் கவாஜா வருவதென்றால் ஜாஷ் இங்லிஸ்தான் தன் இடத்தை இழந்திருக்க வேண்டும். ஆகவே ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் உஸ்மான் கவாஜாவை விடுத்து யோசிக்கத் தொடங்கி விட்டார்கள் என்பதையே வெளிப்படுத்துகிறது.
உஸ்மான் கவாஜா 1986-ம் ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி இஸ்லாமாபாத்தில் பிறந்த பாகிஸ்தான் வம்சாவளி ஆஸ்திரேலிய வீரர். இவர் இதுவரை 85 டெஸ்ட் போட்டிகளில் 6055 ரன்களை 43.56 என்ற சராசரியில் எடுத்துள்ளார். 16 சதங்களையும் 27 அரைசதங்களையும் எடுத்துள்ளார். அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோர் 232 ரன்கள். மொத்தமாக அனைத்து வடிவங்களிலும் முதல் தர, லிஸ்ட் ஏ, டி20 கிரிக்கெட் உட்பட சுமார் 23 ஆயிரம் ரன்களை எடுத்துள்ளார். துணைக்கண்ட பிட்ச்களில் ஆஸ்திரேலியாவுக்காக சிலபல அருமையான இன்னிங்ஸ்களை ஆடிக்கொடுத்தவர்.
ஒருவேளை இந்தியாவுக்கு எதிராக இந்தியாவில் நடைபெறும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் கடைசி வாய்ப்பு அமைந்தாலும் அமையலாம், ஆனால் இப்போதைக்கு அவரது டெஸ்ட் கரியர் முடிந்து விட்டது போல்தான் தெரிகிறது. கவாஜாவுக்கும் வயது 39 ஆகிவிட்டது.
ஆஸ்திரேலியாவுக்காக ஆடிய முதல் பாகிஸ்தான் வம்சாவளி வீரர் என்ற பெருமை என்றென்றைக்கும் கவாஜாவுக்கு நிலைத்து நிற்கும். ஒரு விதத்தில் இங்கிலாந்தின் பவுலிங்கினால் கவாஜா இந்நிலைக்குத் தள்ளப்பட்டார் என்பதை விட டிராவிஸ் ஹெட்டின் பெர்த் அதிரடி சதத்தினால் கவாஜாவின் இடம் பறிபோனது என்பது எவ்வளவோ பரவாயில்லை.
கடந்த போட்டியில் 2-வது இன்னிங்சில் அபாரமாக வீசி 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய மைக்கேல் நேசர், டாக்கெட் ஆகியோர் பாட் கமின்ஸ், நேதன் லயன் ஆகியோருக்கு வழி விட்டுள்ளனர்.
அதுவும் பெர்த்தில் 2-வது இன்னிங்ஸில் கொஞ்சம் இறுக்கமான இலக்கை விரட்டுவதற்கு முன்பாக, கவாஜா காயமடைந்ததால் டிராவிஸ் ஹெட், ‘இது என் நேரம், நான் தான் இறங்க வேண்டும், இறங்குவேன்’ என்று கூறியதாக கமின்ஸ் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியா லெவன் வருமாறு: ஜேக் வெதரால்ட், டிராவிஸ் ஹெட், லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, ஜாஷ் இங்லிஸ், பாட் கமின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நேதன் லயன், ஸ்காட் போலண்ட்.
இங்கிலாந்து லெவன்: ஜாக் கிராலி, பென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ், ஜேமி ஸ்மித், வில் ஜாக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜாஷ் டங்.