

சென்னை: இன்று மதியம் அபுதாபியில் ஐபிஎல் மினி ஏலம் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் வெளிநாட்டு வீரர்களுக்கு அதிகபட்சமாக ரூ.18 கோடிக்கு மேல் பெற முடியாது. இதற்கென விதிமுறை ஒன்றை ஐபிஎல் நிர்வாகக் குழு வகுத்துள்ளது.
இன்று நடைபெறும் ஏலத்தில் மொத்தம் 369 வீரர்கள் பங்கேற்கின்றனர். இதில் 118 வீரர்கள் வெளிநாடுகளை சேர்ந்தவர். இதில் அதிகபட்சமாக 31 வெளிநாட்டு வீரர்கள் உட்பட மொத்தம் 77 வீரர்களை ஐபிஎல் அணிகள் ஒப்பந்தம் செய்யலாம். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.64.30 கோடி உடன் ஏலத்தில் பங்கேற்கிறது. அந்த அணி வசம்தான் பணம் கையிருப்பு அதிகமாக உள்ளது. அதற்கு அடுத்தபடியாக ரூ.43.40 கோடி உடன் ஏலத்தில் சிஎஸ்கே பங்கேற்கிறது.
வெளிநாட்டு வீரர்களுக்கு ரூ.18 கோடி மட்டுமே: வழக்கமாக ஐபிஎல் ஏலம் என்றாலே வீரர்கள் அதிக தொகைக்கு ஏலத்தில் ஒப்பந்தம் செய்யப்படுவது உண்டு. கடந்த சில சீசன்களாக இந்த போக்கு அதிகரித்து வருகிறது. கடந்த 2024 சீசனை முன்னிட்டு நடைபெற்ற ஏலத்தில் ரூ.24.75 கோடிக்கு ஏலத்தில் ஒப்பந்தம் ஆனார் ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க். கடந்த சீசனில் ரிஷப் பந்த் அதிக தொகைக்கு ஏலத்தில் ரூ.27 கோடிக்கு ஒப்பந்தம் ஆனார்.
இந்நிலையில், எதிர்வரும் ஐபிஎல் 2026 சீசனை முன்னிட்டு நடைபெற உள்ள மினி ஏலத்தில் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் ரூ.30 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அவருக்கு ரூ.18 கோடி மட்டுமே வழங்கப்படும். மீதமுள்ள தொகை பிசிசிஐ அறக்கட்டளைக்கு செல்லும். இதுதான் ஏல விதிகளாக உள்ளது.