

எவ்வளவுமுறை சொன்னாலும் எவ்வளவு ‘முன்னாள்கள்’ சொன்னாலும் கேட்க மாட்டோம், ‘அட்டாக்கிங்’ பேட்டிங் தான் ஆடுவோம் என்று பிடிவாதம் பிடிக்காமல் மூளையைப் பயன்படுத்தி ஆடினால் 2வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து வீழ்த்திக் காட்ட முடியும் என்கிறார் ஜெஃப்ரி பாய்காட்.
தி டெலிகிராப் யுகே இதழுக்கு அவர் எழுதியுள்ள பத்தியில் கூறியிருப்பதாவது:
பிரிஸ்பன் பகலிரவு டெஸ்ட்டில் இங்கிலாந்து ஆஸ்திரேலியாவை வீழ்த்த முடியும். ஆஸ்திரேலியாவை விட வீரர்களை ஒப்பிடும் போது இங்கிலாது பலமான அணியே. ஆனால் அட்டாக்கிங் கிரிக்கெட் என்ற சுய அழிவுப் பொத்தானை அமுத்திக் கொண்டே பேட்டர்களை அட்டாக்கிங் ஆக ஆடு என்று பென் ஸ்டோக்ஸ் வலியுறுத்தினால் அது வேலைக்கு ஆகாது.
வீரர்கள் பாசிட்டிவ் ஆக ஆட வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. இவர்கள் நல்ல த்ரில்லிங் கிரிக்கெட் ஆட்டத்தை நமக்கு அளித்தவர்கள் என்பதில் சந்தேகமில்லை.. நாம் கேட்பதெல்லாம் கொஞ்சம் மூளையைப் பயன்படுத்தி, சூழ்நிலை ஆதிக்கம் செலுத்தும் தருணங்களில் ஆடுங்கள் என்பதே. சூழ்நிலையைக் கணித்து அட்டாக் செய்ய வேண்டும் எனும் போது அட்டாக் செய்ய வேண்டுமே தவிர அதையே தாரக மந்திரமாக மூளை கெட்டத்தனமாகப் பயன்படுத்தக் கூடாது.
இந்த ஆஸ்திரேலிய அணி தோற்கடிக்க முடியாத அணியல்ல, ஆனால் இந்த இங்கிலாந்து அணி அவர்கள் வெற்றி பெறுவதற்கான வழிவகைகளை அமைத்துக் கொடுக்கின்றனர். மிகப்பெரிய கால்ஃப் வீரர் ஜாக் நிகலஸிடம் உங்களுக்குப் பிடித்த கால்ஃப் மைதானம் எது என்று கேட்டால் தன் தலையைத்தான் காட்டுவார். எனவே மேல் மண்டைக்கு என்ன செல்கிறதோ அதுதான் முக்கியம்.
இப்போது போய் டெக்னிக் அது இது என்றெல்லாம் பேச நேரம் இல்லை. ஜாக் கிராலியிடம் போய் டெக்னிக்கலாக கொஞ்சம் அட்ஜஸ்ட் செய் என்று சொல்வது வியர்த்தம், ஏனெனில் அவரிடம் அப்படி ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை. செய்த தவறுகளையே மீண்டும் மீண்டும் செய்யாதீர்கள். இந்த உயர்ந்த மட்டத்திற்கு ஆட வந்த பிறகு பேட்டரிடம் போய் இப்படி ஆடு அப்படி ஆடு என்றெல்லாம் சொல்லக் கூடாது. வீரரே அதை முடிவு செய்யத் திராணியில்லாது இருந்தால் அவருக்குப் பதில் வேறு வீரரைச் சேர்க்க வேண்டியதுதான்.
இங்கிலாந்தில் நடந்த 2024 ஆஷஸ் தொடரில் இப்படித்தான் இங்கிலாந்து அணி தன் அலட்சியம் மற்றும் முட்டாள்தனமான பேட்டிங்கினால் ஆஷஸைத் தூக்கி எறிந்தனர். ஆகவே மீண்டும் அதைச் செய்யாதீர்கள்.
இவ்வாறு கூறியுள்ளார் ஜெஃப்ரி பாய்காட்.