

மியாமி கார்டன்: பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அமெரிக்காவின் மியாமி கார்டனில் உள்ள ஹார்ட் ராக் மைதானத்தில் நேற்று ‘ஹெச்’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான உருகுவே, சவூதி அரேபியா அணியுடன் மோதியது. உருகுவே வீரர் அராவ்ஜோ அடித்த ஆபத்தான ஷாட்டை, சவூதி அரேபியாவின் கோல்கீப்பர் முகமது அல் ஒவைஸ் சாதுரியமாகத் தடுத்து நிறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, ஃபெடெரிகோ வினாஸ் துல்லியமாக இலக்கை நோக்டிக தலையால் முட்டிய பந்தையும் அல் ஒவைஸ் அசாத்தியமான முறையில் தடுத்தார். ஆட்டத்தின் 41-வது நிமிடத்தில் சவூதி அரேபியா அணி முதல் கோலை அடித்தது. கார்னரில் இருந்து உதைக்கப்பட்ட பந்தை பாக்ஸ் பகுதிக்குள் நின்ற சவூதி வீரர் முகமது கன்னோ இலக்கை நோக்கி தலையால் முட்டினார்.
இதை உருகுவே அணியின் கோல் கீப்பர் முஸ்லெராவால் முழுமையாகத் தடுக்க முடியாமல் போனது. அவர், மீது பட்டு திரும்பி வந்த பந்தை அங்கு சுதாரிப்பாக நின்ற அல்-அம்ரி மின்னல் வேகத்தில் கோல் வலைக்குள் திணிக்க சவூதி அரேபியா அணி 1-0 என முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் 2-வது பாதியில் உருகுவே வீரர் வினாஸ் இலக்கை நோக்கி தலையால் முட்டிய பந்து கோல்கம்பத்துக்கு மிக அருகில் வெளியே சென்று ஏமாற்றம் அளித்தது.
தொடர்ந்து, மனுவேல் உகார்டே நீண்ட தூரத்திலிருந்து அடித்த வலுவான ஷாட் சவூதி அரேபிய அணியின் கோல்கீப்பர் அல் ஒவைஸைத் தாண்டினாலும், துரதிர்ஷ்டவசமாக கோல் கம்பத்தின் விளிம்பில் பட்டுத் தெறித்தது. 80-வது நிமிடத்தில் உருகுவே அணியின் வினாஸ் இலக்கை நோக்கி தலையால் முட்டிய பந்தை சவூதி அரேபிய அணியின் கோல்கீப்பர் அல் ஒவைஸால் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாமல் போனது.
அப்போது அருகில் நின்ற மேக்ஸி அராவ்ஜோ மின்னல் வேகத்தில் செயல்பட்டு பந்தை கோல் வலைக்குள் செலுத்தினார். இதனால் ஆட்டம் 1-1 என சமநிலையை எட்டியது. இதன் பின்னர் வெற்றிக்கான கோலை அடிக்க உருகுவே இறுதிவரை போராடியது. ஃபெடெரிகோ வல்வெர்டே அடித்த ஆபத்தான ஷாட்டை அல் உவைஸ் தடுத்து நிறுத்தினார். முடிவில் இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.
29 முறை கோல் அடிக்க முயற்சி
சவூதி அரேபியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் உருகுவே அணி பந்தை அதிக நேரம் தன் வசம் வைத்திருந்து ஆட்டத்தை முழுமையாகக் கட்டுப்படுத்தியது. சவூதி அரேபியா அணி 7 முறை கோல் அடிக்க முயற்சித்த நிலையில் உருகுவே அணி 29 முறை கோல் அடிக்க முயற்சி செய்து கடும் நெருக்கடி கொடுத்தது. இருப்பினும் ஆட்டம் முடிவடைய 10 நிமிடங்கள் எஞ்சியிருந்த நிலையிலேயே உருகுவே அணியால் கோல் அடித்து ஆட்டத்தை டிரா செய்ய முடிந்தது.