ஸ்பெயின் வெற்றிக் கொண்டாட்டத்தில் ‘இடம்பிடிக்க’ முயன்ற ட்ரம்ப் - ரசிகர்கள் எதிர்ப்பு

ஸ்பெயின் வெற்றிக் கொண்டாட்டத்தில் ‘இடம்பிடிக்க’ முயன்ற ட்ரம்ப் - ரசிகர்கள் எதிர்ப்பு
Updated on
1 min read

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும், ஃபிபா தலைவர் கியானி இன்ஃபான்டினோவும் அர்ஜெண்டினா - ஸ்பெயின் அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில் தங்களது செயல் காரணமாக ரசிகர்களின் எதிர்ப்பை எதிர்கொண்டனர்.

ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வென்றதைத் தொடர்ந்து, அந்த அணிக்கு உலகக் கோப்பையை ட்ரம்ப் வழங்கினார். பின்னர் வீரர்களுடன் சேர்ந்து வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கேற்க அவர் முயன்றார். ஆனால், ஃபிபா தலைவர் இன்ஃபான்டினோ அவரை மெதுவாக அங்கிருந்து அழைத்துச் சென்றார்.

இதேபோன்ற சம்பவம் கடந்த ஆண்டு நடைபெற்ற கிளப் உலகக் கோப்பை இறுதிப் போட்டியிலும் நடந்திருந்தது. அப்போது சாம்பியனான செல்சிக்கு கோப்பையை வழங்கிய ட்ரம்ப், வீரர்களின் கொண்டாட்டத்தில் இணைந்துகொள்ள முயன்றதும் இத்தகைய எதிர்ப்பை ஈர்த்தது.

போட்டி தொடங்குவதற்கு முன், ட்ரம்ப் ‘மெரைன் ஒன்’ ஹெலிகாப்டர் மூலம் மைதானத்துக்கு வந்தார். ஸ்பெயின் மன்னர் ஆறாம் ஃபெலிப்பே, கனடா பிரதமர் மார்க் கார்னி, மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷெயின்பாம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுடன் அவர் போட்டியை நேரில் கண்டுகளித்தார்.

மைதானத்தின் பெரிய திரையில் ட்ரம்ப் தோன்றியபோது சில ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதை தொடர்ந்து பரிசளிப்பு நிகழ்ச்சிக்காக அவர் மைதானத்திற்குள் வந்தபோது எதிர்ப்புக் குரல் மேலும் அதிகரித்தது.

மறுதேர்தலுக்குப் பிறகு பல்வேறு முக்கிய விளையாட்டு நிகழ்ச்சிகளில் ட்ரம்ப் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். இந்த உலகக் கோப்பையை அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ இணைந்து நடத்தும் நிலையில், இந்தத் தொடரில் ட்ரம்ப் நேரில் கண்ட முதல் போட்டி இதுவாகும்.

ஃபிபா தலைவர் இன்ஃபான்டினோவுடன் அதிபர் ட்ரம்புக்கு நெருக்கமான உறவு இருப்பதாகக் கூறப்படுகிறது. அமெரிக்க வீரர் ஃபோலரின் பாலோகனின் சர்ச்சைக்குரிய சிவப்பு அட்டைத் தடையை மறுபரிசீலனை செய்யுமாறு ஃபிபாவை ட்ரம்ப் வலியுறுத்தியிருந்தார். அதன் பின்னர் அந்தத் தடையை ஃபிபா நீக்கியது. இதனால், அமெரிக்க அணியைச் சுற்றியிருந்த அரசியல் சர்ச்சையும் பெரும் கவனத்தை ஈர்த்தது. இந்தச் சர்ச்சையால் கவனம் சிதறிய அமெரிக்க அணி, பெல்ஜியத்திடம் தோற்று வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

ஸ்பெயின் வெற்றிக் கொண்டாட்டத்தில் ‘இடம்பிடிக்க’ முயன்ற ட்ரம்ப் - ரசிகர்கள் எதிர்ப்பு
அர்ஜெண்டினாவை வீழ்த்தி 2-வது முறையாக உலக சாம்பியன் ஆனது ஸ்பெயின் | FIFA WC 2026 Final

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in