

23 வயதேயான இந்திய அதிவேக பவுலர் மயங்க் யாதவுக்கு எதிரான வசைகளும் ட்ரோல்களும் மிகவும் பயங்கரமானவை என்று மேஇ.தீவுகள் முன்னாள் பவுலரும் தற்போதைய வர்ணனையாளருமான இயன் பிஷப் கூறியுள்ளார்.
அதிவேகப் பந்து வீச்சாளரான மயங்க் யாதவ் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024 தொடரின் போது ஏற்பட்ட ஒரு பெரிய பின்னடைவில் தொடங்கி, தொடர்ச்சியான காயங்களால் அவதிப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கடுமையான முதுகுப் பிரச்சினை, அவரை ஐபிஎல் 2025 தொடரின் மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலக்கி வைத்தது.
இப்படி கிரிக்கெட் வாழ்க்கையில் பெரும் பின்னடைவுகளைச் சந்தித்து விட்டு மீண்டும் வந்துள்ளார் அவர். 2026 சீசனின் தனது முதல் போட்டியில் யாதவ் புதன்கிழமை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக விளையாடினார், ஆனால் விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. கடைசி ஓவரில் 20 ரன்கள் உட்பட நான்கு ஓவர்களில் 56 ரன்களை அவர் விட்டுக்கொடுத்தார். இறுதியில் ராஜஸ்தான் அணி 159/6 ரன்களை எடுத்தது, பின்னர் லக்னோ அணியை 119 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கிரிக்கெட்டில் ஒரு பவுலர் குறிப்பாக 353 நாட்கள் கடும் காயங்கள், சிகிச்சைகளுக்குப் பின்னர் கடும் பயிற்சி மேற்கொண்டால்தான் மீண்டும் வந்து மணிக்கு 150 கிமீ வீச முடியும். ஐபிஎல் ரசிகர்களுக்கு கிரிக்கெட் தெரியாது என்பதை அவர்கள் மயங்க் யாதவை ட்ரோல் செய்வதன் மூலம் தங்களது தற்குறித்தனத்தை அம்பலப்படுத்தியுள்ளனர்.
இயன் பிஷப் உண்மையில் மயங்க் யாதவ் குறித்துப் பேசியதை மற்ற யாரும் பேசாமல் இருப்பது ஐபிஎல் பணமழை கிரிக்கெட் வளர்த்து விடும் அராஜகப் போக்கையே காட்டுகிறது. “இன்று மயங்க் யாதவ் பற்றிய எதிர்மறையான கருத்துக்களைப் பார்ப்பது திகிலூட்டுகிறது. அந்த இளைஞர் தனது 21 வயதில், தனது கிரிக்கெட் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் கிட்டத்தட்ட இழந்துவிட்டிருப்பார்.
அவர் மீண்டும் விளையாடுவதைப் பார்ப்பதே ஒரு பெரிய உத்வேகம். அவர் மீண்டும் மணிக்கு 150 கி.மீ வேகத்தில் பந்து வீசியதே ஒரு அதிசயம். 23 வயதில், அவன் உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் என்று அவருக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள். கட்டுப்பாடு தானாகவே வரும்.” என்று கருணையுடனும் பரிவுடனும் அவரை அணுக வேண்டிய நிர்பந்தத்தை வலியுறுத்தியுள்ளார்.
மயங்க் யாதவின் இளம் கிரிக்கெட் வாழ்க்கை, பல நம்பிக்கைகள் நிறைந்ததாக இருந்தாலும், பின்னடைவுகளாலும் சூழப்பட்டிருந்தது. 2024-ல் அவர் ஒரு பரபரப்பான அறிமுகத்தை மேற்கொண்டார். தனது அறிமுகப் போட்டியிலேயே மணிக்கு 155.8 கி.மீ வேகத்தில் பந்து வீசியது எதிர்பார்ப்புகளை அதிகரித்தது. ஐபிஎல் 2024-ல், அவர் 4 போட்டிகளில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார், மேலும் வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் மூன்று போட்டிகளில் 6.91 என்ற எகானமி ரேட்டில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால், தொடர்ச்சியான காயங்கள் அவரை எப்போதும் அடுத்த கட்டத்திற்கு முன்னேற முடியாத நிலைக்குத் தள்ளின. இந்திய அணிக்காக விளையாடிய பிறகு, அவர் மீண்டும் காயமடைந்தார், பின்னர் மற்றொரு முதுகு காயத்தால் பாதிக்கப்பட்டார். இது ஐபிஎல் 2025-ன் முதல் பாதியில் அவர் விளையாட முடியாமல் செய்தது.
அந்த சீசனில், மீண்டும் முதுகு காயம் ஏற்படுவதற்கு முன்பு அவர் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடினார். ஒருவருடைய கிரிக்கெட் வாழ்க்கை, அவரது வாழ்வாதாரம், கடின உழைப்பு போன்றவற்றைப் பற்றியெல்லாம் இந்த நெட்டிசன்கள் என்ற மவுட்டீக கிரிக்கெட் ரசிகர்கள் கும்பலுக்கு கவலையில்லாத நிலை தோன்றி வருகிறது. முதலில் இந்த ட்ரோல் கலாச்சாரத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.