பரிதாபம்... ஐசிசி - ஆஸி. கூட்டணி ஒழித்த 23 வயது மே.இ.தீவுகள் பவுலர் ஜெர்மைன் லாசன் தெரியுமா?

இன்று ஜெர்மைன் லாசன் பிறந்த நாள்
பரிதாபம்... ஐசிசி - ஆஸி. கூட்டணி ஒழித்த 23 வயது மே.இ.தீவுகள் பவுலர் ஜெர்மைன் லாசன் தெரியுமா?
Updated on
2 min read

ஐசிசி பந்து வீச்சு ஆக்‌ஷன் அடிப்படையில் ஒழித்த பவுலர்களில் மே.இ.தீவுகளின் ஜெர்மைன் லாசன் உண்மையில் பரிதாபத்துக்குரியவர். பாகிஸ்தானின் சயீத் அஜ்மலை அனைத்து அணி முன்னணி வீரர்களும் ஆடத் திணறிக்கொண்டிருந்த போது அவர் ஆக்‌ஷன் மீது ஐயத்தைக் கிளப்பி அவரை சோதனைக்கூடத்திற்கு அனுப்பி, அவர் மீண்டும் ஆக்‌ஷனை சரி செய்த பிறகு வீசும்போது ஒன்றுமில்லாமல் போனார். அதே கதைதான் ஜெர்மைன் லாசனுக்கும் நடந்தது. 1982ம் ஆண்டு ஜனவரி 13-ம் தேதியான இன்றுதான் அவரது பிறந்த தினம்.

பிரெட் லீ மீது ஒரு புகழ்பெற்ற நடுவர் ஆக்‌ஷன் குறித்த புகார் எழுப்பிய போது ஐசிசி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இலங்கையின் முத்தையா முரளிதரனை சோதனைக்கூடத்தில் விலங்கு போல் பரிசோதனைக்குட்படுத்தியது ஐசிசி. அதே கதைதான் ஜெர்மைன் லாசனுக்கும் நடந்தது, ஆனால் முரளிதரன் மீண்டார், ஜெர்மைன் லாசன் மீண்டும் வரவேயில்லை தொலைந்து போனார்.

ஆஸ்திரேலிய முன்னால் தொடக்க வீரர் ஜஸ்டின் லாங்கர் 2010-ம் ஆண்டு எழுதி வெளியிட்ட தன் வாழ்க்கை வரலாற்று நூலில் ஷோயப் அக்தர், வக்கார் யூனிஸ், அதற்கு அடுத்த இடத்தில் அதிவேக பவுலர்கள் வரிசையில் ஜெர்மைன் லாசனை வைத்தார். அவர் எதிர்கொண்ட மிக அதிவேக பவுலர்களில் ஜெர்மைன் லாசனும் ஒருவர். அக்தர் அளவுக்கு வேகம் வீசக்கூடியவர் ஜெர்மைன் லாசன்.

ஜெர்மைன் லாசன் 2002-2005-ம் ஆண்டுகளுக்கு இடையே 13 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 51 டெஸ்ட் விக்கெட்டுகளைக் கைப்பற்றியவர். இதில் வங்கதேசத்திற்கு எதிராக டாக்காவில் 3 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளையும் இன்னொரு போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஹாட்ரிக் சாதனையையும் புரிந்தார். ஆனால் மறக்க முடியாத போட்டி.... மே.இ.தீவுகள் டெஸ்ட் சேசிங்கில் வரலாறு, உலக சாதனை படைத்த 2003ம் ஆண்டு ஆண்டிகுவா டெஸ்ட் போட்டி.

அதில் ஜெர்மைன் லாசன் ஆஸ்திரேலியாவின் அதிரடி வலுகொண்ட பேட்டிங் வரிசைக்கு எதிராக 78 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அந்த டெஸ்ட் போட்டியில்தான் 4வது இன்னிங்சில் 418 ரன்கள் இலக்கை மே.இ.தீவுகள் வெற்றிகரமாக விரட்டி உலக சாதனை நிகழ்த்தியது.

கடைசி டெஸ்ட் போட்டியை ஜெர்மைன் லாசன் ஆடும்போது அவருக்கு வயது 23. அச்சமூட்டக்கூடிய பவுலர் என்பதற்குக் காரணமான அவரது ஆக்‌ஷனே அவரது கிரிக்கெட் வாழ்க்கைக்கு எமனானது. ஐசிசி இவரது ஆக்‌ஷனை சோதனைக்குட்படுத்தியது. ஆக்‌ஷனை மாற்றிய பிறகு அந்த ஜெர்மைன் லாசன் காணாமல் போனார். 2008-ல் தொழில்பூர்வ கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். 2008-ல் ஓய்வு பெற்ற பிறகே அவர் பொதுவெளியில் இல்லை. பொதுப்பார்வையிலிருந்தே மறைந்து விட்டார்.

2002 நவம்பர் மாதம் இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் கடைசி நிமிட பதிலி வீரராக மே.இ.தீவுகள் அணியில் நுழைந்த ஜெர்மைன் லாசன் 7 போட்டிகள் கொண்ட தொடரின் கடைசி போட்டியான அதில் மே.இ.தீவுகள் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 316 ரன்கள் நிர்ணயித்தது. அப்போது ஜெர்மைன் லாசன் சேவாக், தினேஷ் மோங்கியா, லஷ்மண், திராவிட் ஆகியோரை வீழ்த்தி பெவிலியனுக்கு அனுப்பினார்.

டெஸ்ட்டில் லாசனின் ஸ்டரைக் ரேட் 46.3. இது வெஸ்ட் இண்டீஸின் டாப் பவுலர்களான மால்கம் மார்ஷல், கார்னர், ஹோல்டிங், கர்ட்லி ஆம்புரோஸ் ஆகியோரை விடவும் சிறப்பான ஸ்ட்ரைக் ரேட் என்பது கவனிக்கத்தக்கது.

இந்தியாவுக்கு எதிராக இந்த ஒருநாள் போட்டிக்குப் பிறகு வங்கதேசத்தில் டெஸ்ட் போட்டியில் 3 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். வெஸ்ட் இண்டீஸ் அந்தப் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

ஆண்டிகுவாவில் 7/78 ஸ்பெல் குறித்து ஜஸ்டின் லாங்கர் தன் சுயசரிதையில் எழுதும் போது, “உள்ளபடியே நான் பயந்தேன் அவர் என்னைக் கொல்லாமல் விட மாட்டார் என்றே நினைத்தேன்” என்று கூறியுள்ளார். “நான் எப்படியோ 42 ரன்கள் தேற்றினேன், ஆனால் நான் பார்த்ததிலேயே ஒரு காட்டுத்தனமான வேகப்பந்து வீச்சு என்றால் அது ஜெர்மைன் லாசனுடையதுதான்.” என்று எழுதினார் லாங்கர்.

முரளிதரன், சயீத் அஜ்மல், முகமது ஹபீஸ், பிலால் ஆசிப், ஹர்பஜன் சிங் என்று ஆஸ்திரேலியா தங்களுக்கு எதிராக வீசி அவர்களால் ஆட முடியாத பவுலர்களை ஒழிப்பதில் வல்லவர்கள். ஜெர்மைன் லாசன் மீதும் கடும் புகார்கள், அளவு கடந்த புகார்கள் என்று முன்னாள் மே.இ.தீவுகள் ஆஃப் ஸ்பின்னர் ரோஜர் ஹார்ப்பர் அப்போது கார்டியன் இதழுக்குத் தெரிவித்ததையும் நாம் இங்கு நினைவுகூர வேண்டும்.

ஐசிசி பரிசோதனைக்குப் பிறகே சரிசெய்யப்பட்ட ஆக்‌ஷன் சரிவரவில்லை, காயங்களும் அவரை மாறி மாறித் தாக்க 2008-ல் ஓய்வு அறிவித்து விட்டு 2010-ல் அமெரிக்கா சென்று விட்டார்.

லாங்கர் அதன் பிறகு சுயசரிதையில் அவரைப் பற்றி ஆஹா ஓஹோ என்று எழுதுகிறார், ஆனால் அன்று அவர் ஆக்‌ஷன் மீது சந்தேகம் எழுந்த போது ஆஸ்திரேலியாவுக்கு இவர் எந்த ஒரு கண்டனக்குரலையோ, எதிர்ப்பையோ, லாசனுக்கு தன் ஆதரவையோ காட்டவில்லையே.

இதுதான் ஆஸ்திரேலிய ஸ்போர்ட்டிங் மனநிலை. ஒரு அருமையான பவுலரை மே.இ.தீவுகள் இழந்தது என்பதை விட மே.இ.தீவுகளின் கிரிக்கெட் சரிவை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது உயர்த்திப் பிடிக்க வந்த ஆபத்பாந்தவ பவுலரை ஒன்றுமில்லாமல் செய்து மே.இ.தீவுகள் கிரிக்கெட்டையே காலி செய்தது ஐசிசி-ஆஸ்திரேலியக் கூட்டணி.

பரிதாபம்... ஐசிசி - ஆஸி. கூட்டணி ஒழித்த 23 வயது மே.இ.தீவுகள் பவுலர் ஜெர்மைன் லாசன் தெரியுமா?
“என்னை ஆல்ரவுண்டராக வளர்க்க விரும்புகிறார்கள்” - ஹர்ஷித் ராணா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in