

சென்னை: டிஎன்சிஏ சார்பில் நடத்தப்பட்டு வரும் டிஎன்பிஎல் தொடரின் 10-வது சீசன் போட்டி வரும் ஆகஸ்ட் 4-ம் தேதி தொடங்குகிறது. இம்முறை தொடர் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட போட்டி ஆகஸ்ட் 4 முதல் 15 வரை திண்டுக்கல்லிலும், 2-வது கட்ட போட்டி ஆகஸ்ட் 18 முதல் 28 வரை சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும் நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் நேற்று டிஎன்சிஏ வளாகத்தில் நடைபெற்றது. இதில், அதிகபட்சமாக அஸ்வந்த் வால்தப்பாவை ரூ.14.45 லட்சத்துக்கு சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி ஏலம் எடுத்தது. இதற்கு அடுத்தபடியாக முகிலேஷை ரூ.13.70 லட்சத்துக்கு நெல்லை ராயல் கிங்ஸ் அணியும், சித்தார்த் மகாதேவனை ரூ.8.70 லட்சத்துக்கு மதுரை பாந்தர்ஸ் அணியும் ஏலம் எடுத்தன.
ஏலத்துக்கு பின்னர் டிஎன்சிஏ தலைவர் டி. ஜே. ஸ்ரீனிவாசராஜ் கூறும்போது, “இம்முறை போட்டியை சோனி தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு செய்கிறது. டிஎன்சிஏ-வின் யூடியூப் சானலிலும் நேரலையாக போட்டியை பார்க்கலாம். முதன்முறையாக இந்தி, ஆங்கிலம், தமிழ் என 3 மொழிகளில் போட்டிகள் வர்ணனை செய்யப்பட உள்ளது” என்றார்.