

டொராண்டோ: பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று கனடாவின் டொராண்டோவில் நடைபெற்ற நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் போர்ச்சுகல் - குரோஷியா அணிகள் மோதின.
ஆட்டத்தின் தொடக்கத்தில் போர்ச்சுகல் அணிக்கு கோல் அடிக்க வாய்ப்புகள் கிடைத்தன. ரஃபேல் லியோ மற்றும் புரூனோ பெர்னாண்டஸ் ஜோடி குரோஷிய தற்காப்பு அரணை சோதித்தது. ஆனால் குரோஷிய கோல்கீப்பர் லிவகோவிச் சிறப்பாக செயல்பட்டதால் அந்த அணி கோல் வாங்குவதில் இருந்து தப்பித்தது. முதல் பாதி ஆட்டம் 0-0 என்ற நிலையில் இருந்தது.
2-வது பாதி ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே குரோஷியா ஆதிக்கம் செலுத்தியது. 53-வது நிமிடத்தில் குரோஷியா அணியின் வீரர் ஜோசிப் ஸ்டானிசிச், யாரும் மார்க் செய்யப்படாமல் இருந்த இவான் பெரிசிச்சிக்கு பந்தை கிராஸ் செய்தார். அதை அவர், கோல் கம்பத்தின் கீழ் கார்னரை நோக்கி திணிக்க குரோஷியா 1-0 என முன்னிலை பெற்றது.
64-வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணிக்கு கார்னர் கிக் கிடைத்தது. இதில் உதைக்கப்பட்ட பந்தை குரோஷியா டிஃபென்டர்கள் தடுத்து வெளியேற்றினர். ஆனால் அந்த நேரத்தில் பாக்ஸ் பகுதிக்குள் போர்ச்சுகல் வீரர் ரெனாடோ வேகாவை, நிக்கோலா விளாசிச் பின்னால் இருந்து இழுத்தார். இதனால் போர்ச்சுகல் அணிக்கு பெனால்டி கிக் வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதை பயன்படுத்தி 41 வயதான நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்தார். உலகக் கோப்பை தொடரின் நாக் அவுட் சுற்றில் கிறிஸ்டியானோ ரொனால்டோ அடித்த முதல் கோல் இதுவாகும். அவர், அடித்த கோல் காரணமாக ஆட்டம் 1-1 என சமநிலையை எட்டியது. 90 நிமிடங்களின் முடிவிலும் இதே நிலையே இருந்தது.
இதையடுத்து காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட 4-வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் ரஃபேல் லியோவின் துல்லியமான கிராஸை பெற்ற பதிலி வீரரான கோன்சாலா ரமோஸ் தலையால் முட்டியவாறு கோல் அடித்து அசத்தினார். இதனால் போர்ச்சுகல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
தொடர்ந்து 13-வது நிமிடத்தில் குரோஷியா அணியின் ஜோஸ்கோ கிவார்டியோல் கோல் அடித்தார். இதனால் போட்டி 2-2 என சமநிலையை எட்டியதாக குரோஷியா அணி வீரர்கள் கொண்டாடினர். ஆனால் நீண்ட நேரம் நீடித்த விஏஆர் பரிசீலனைக்குப் பிறகு ஆஃப்சைடு என நடுவரால் அறிவிக்கப்பட்டு கோல் மறுக்கப்பட்டது. முடிவில் போர்ச்சுகல் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியது. இந்த சுற்றில் போர்ச்சுகல் அணி வரும் 6-ம் தேதி ஸ்பெயின் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.