மீண்டும் அதிரடி தொடக்கத்தை வீணடித்த திலக் வர்மா | IND-A vs SL-A

மீண்டும் அதிரடி தொடக்கத்தை வீணடித்த திலக் வர்மா | IND-A vs SL-A
Updated on: 
2 min read

தோஹாவில் நடைபெறும் ரைசிங் ஸ்டார்ஸ் ஆசியக் கோப்பை ஒருநாள் தொடர் அரையிறுதியில் திலக் வர்மா தலைமையிலான இந்தியா ஏ அணியை இலங்கை ஏ அணி பந்தாடியது என்றுதான் கூற வேண்டும். 350+ ரன்கள் எடுக்க வேண்டிய பிட்சில் இந்தியா ஏ 317 ரன்களையே எடுக்க இலங்கை அணியில் தொடக்க வீரர்கள் லசித் குரூஸ்புள்ளே (116), சினேஷ் ஜெயவர்தெனா (105) இருவரும் சதம் எடுக்க 51 பந்துகள் மீதமுள்ள நிலையில் இலங்கை ஏ அணி 318/2 என்று அபார வெற்றி பெற்று இறுதிக்குள் நுழைந்தது.

எப்படி அன்று பாகிஸ்தான் எடுத்த 313 ரன்களை விரட்ட முடியாமல் வெற்றியை திலக் வர்மாவின் 149 பந்துகள் சதம் என்ற இன்னிங்ஸ் தடுப்புச் சுவராக நின்றதோ நேற்றும் சூரியவன்ஷி கொடுத்த அதிரடி தொடக்கத்தை திலக் வர்மா வீணடித்தார். 66 பந்துகளில் 53 ரன்கள் என்று அவர் படுமந்தமாக ஆடினார். வேண்டுமென்றேதான் அப்படி ஆடுகிறார், நிச்சயம் சுயநலமியாக ஆடுகிறார்.

திலக் வர்மாவின் கேப்டன்சி நிச்சயம் படுமோசம் என்பதில் இருவேறு கருத்துக்கள் இல்லை, பிட்சை சரியாக எடைபோடத் தெரியவில்லை. டாஸ் வென்று நேற்று பேட்டிங்கைத் தேர்வு செய்தார். காரணம், இரண்டாவது இன்னிங்சில் பிட்ச் உடையும் என்று எதிர்பார்த்தார் அது நடக்கவே இல்லை. மேலும் அன்று பாகிஸ்தானுக்கு எதிராக 313 ரன்களை இவரது ஆமைவேக பேட்டிங்கினால்தான் சேஸ் செய்ய முடியவில்லை என்பதை மறுக்கும் விதமாக நேற்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார்.

அன்று பாகிஸ்தானுக்கு எதிராக சேஸ் செய்ய முடியாமல் தோற்ற அதே பிட்ச்தான் இது. மாறவேயில்லை. வைபவ் சூரியவன்ஷியின் 27 பந்துகள் 40 ரன்களும் அபிஷேக் சர்மாவின் அதிரடியும் 8 ஓவர்களில் 80 ரன்கள் என்ற டி20 ரக ஸ்டார்ட்டை இந்திய அணிக்குக் கொடுத்தது, ஆனால் அந்தத் தொடக்கத்தை திலக் வர்மா மேன்மேலும் கொண்டு செல்லவே இல்லை.

ஓவருக்கு 8 ரன்கள் என்ற தொடக்கம் 6 ரன்களாகக் குறைந்து கடைசியில் 40 ஓவர்களில் 235 என்று 6 ரன்களுக்கும் கீழ் குறைந்ததற்குக் காரணம் திலக் வர்மா போட்டியின் உத்வேகத்தையும் அதன் விறுவிறுப்பையும் தன் ஆமைவேக பேட்டிங்கினால் குறைத்ததே 66 பந்துகளில் சதம் எடுக்க வேண்டாம் குறைந்தது 66 பந்துகளில் 80 ரன்களையாவது எடுப்பதுதானே முறை. அதுவும் இந்த மட்டைப் பிட்சில் இவர் ஆடுவதைப் பார்த்தால் ஏதோ கிரீன் டாப் பிட்சில் தட்டுத் தடுமாறி ஆடுவது போல் ஆடுகிறார்.

இதில் அன்று பாகிஸ்தானுக்கு எதிராக தன் பேட்டிங்கினால்தான் தோற்றது என்ற தன்னுணர்வு இல்லாமல் அன்று தனக்கு பார்ட்னர்கள் இல்லை என்ற கோட்பாட்டை இவரே உருவாக்கி அதை நம்பவும் தொடங்கியதால் நேற்று 3-ம் நிலைக்குத் தன்னை ‘முன்னேற்றிக்’கொண்டார். இது இன்னும் விசேஷம் அன்று அடித்து ஆடவேண்டிய இடத்தில் இறங்கி பிளேடு போட்டார். நேற்று அரையிறுதி ஆட்டத்தைக் கெடுக்க முன்னதாகவே இறங்கி அறுவையைப் போட்டார்.

தன்னையும் தன் டவுன் ஆர்டரையும் முன்னேற்றிக் கொள்வதிலும் தன் முன்னேற்றத்தைக் கொண்டே செயல்படும் இவரால் 2 போட்டிகளில் தோற்று வெளியேறிய நிலையில் இவர் இந்திய சீனியர் அணிக்கு கேப்டன் ஆனால் என்ன ஆகும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். கம்பீர் இவரை டி20 அல்லது ஒருநாள் போட்டி அணியின் கேப்டனாக்கினால் அதை விட சீரழிவு வேறு எதுவும் இல்லை.

ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த், சர்பராஸ் கானை ஒழித்து விட்டு பிரியன்ஷ் ஆர்யா போன்று இன்னும் எத்தனையோ வீரர்கள் கதவைத் தட்டிக் கொண்டிருக்கும் போது திலக் வர்மா என்னும் ஒரு கன்சர்வேட்டிவ் சுயநல பேட்டரைக் கேப்டனாக்கி அழகுபார்ப்பது என்ன கோலமோ என்று ரசிகர்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர்.

இதில் நேற்று இலங்கை அணி ஆரம்பத்திலேயே சதம் எடுத்த குரூஸ்புல்லேயை இழந்திருக்க வேண்டும். மிட் ஆஃபில் கேட்சை விட்டது வேறு யாரும் அல்ல கேப்டன் திலக் வர்மாவேதான். அதன் பிறகு முதல் விக்கெட் 128 பந்துகளில் 174 ரன்களைப் புரட்டி எடுத்த பிறகே வந்தது. சிலபல புரியாத கேப்டன்சி உத்திகள் வேறு நேற்று திலக் வர்மாவின் ‘திறமை’யை அம்பலப்படுத்தியது.

அதே போல் கம்பீரின் இன்னொரு செல்லப்பிள்ளை இனி சீனியர் இந்திய அணியில் இடம்பெற்றால் அது நிச்சயம் சார்புள்ள அணித்தேர்வாகவே இருக்கும் அன்று பாகிஸ்தான் ஏ அணிக்கு எதிராக ஆய் ஊய் என்று ஆக்ரோஷம் காட்டி 77 ரன்கள் என்று செம் சாத்து வாங்கினார்.

நேற்று இலங்கை ஏ அணிக்கு எதிராக 7 ஓவர்களில் 61 ரன்கள் என்று ஓவருக்கு 9 ரன்கள் பக்கம் வாரி வழங்கியுள்ளார். இதில் சிராஜின் பார்ம் குறித்து தப்பும் தவறுமாகக் கேள்வி எழுப்பி விட்டு சிராஜுக்குப் பதிலாக ஒருநாள் போட்டிகளில் ஹர்ஷித் ராணாவைக் கொண்டு வரத்தான் முடியுமா என்ன? இவர்கள் செய்தாலும் செய்வார்கள். எந்த வித விமர்சனங்களுக்கும் செவிசாய்க்காத ஒரு ‘ரெஜீமிடம்’ இந்திய அணி சிக்கிக் கொண்டிருக்கிறது.

அத்தகைய செருக்கு மிகுந்த போக்கினால்தான், இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்றில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய சிராஜை உட்கார வைக்க முடிகிறது. அனைவரும் கடும் விமர்சனங்களைத் தொடுத்த பிறகும் இதைச் செய்ய முடிகிறது என்றால் அது சுத்த சுயம்பிரகாச ஆணவம் தவிர வேறு எதுவும் இல்லை.

மீண்டும் அதிரடி தொடக்கத்தை வீணடித்த திலக் வர்மா | IND-A vs SL-A
ஏசிசி ரைசிங் ஸ்​டார் தொடர்: அரை இறுதியில் இந்​தியா ‘ஏ’ அணியை வீழ்த்தியது இலங்கை ‘ஏ’

X