விராட் கோலி, ரோஹித்தை எதிர்கொள்வது புதிதல்ல: சொல்கிறார் தெம்பா பவுமா
ராய்ப்பூர்: இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராய்ப்பூரில் இன்று நடைபெறுகிறது.
இதையொட்டி தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் தெம்பா பவுமா கூறியதாவது: "ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளது இந்திய அணிக்கு பலம் சேர்த்துள்ளது. தொடரின் தொடக்கத்தில் நாங்கள் சொன்னது போல், இவர்கள் இருவரும் நிறைய அனுபவமும் திறமையும் கொண்டவர்கள், அது அணிக்கு பயனளிக்கும். இது எங்களுக்கு தெரியாத விஷயம் ஒன்றும் இல்லை. 2007-ம் ஆண்டு டி 20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்க அணி விளையாடி உள்ளது.
அப்போது நான் பள்ளி மாணவனாக இருந்தேன். ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இந்திய அணியுடன் தான் இருக்கின்றனர். இதில் புதிதாக ஒன்றும் இல்லை. அவர்கள், உலகத்தரம் வாய்ந்த வீரர்கள். அவர்களுக்கு எதிராக விளையாடுவதும் புதிதல்ல, அதை கடந்துதான் வந்திருக்கிறோம். மோசமான தருணங்களும் இருந்துள்ளன. நல்ல தருணங்களும் இருந்துள்ளன. இதுபோன்ற விஷயங்கள் தொடரை மிகவும் உற்சாகப்படுத்துகின்றன.
முதல் ஒருநாள் போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தோம். பேட்டிங் செயல்திறனுக்கு இடையிலான இடைவெளி பெரியதாக இல்லை. அந்த ஆட்டத்தில் இந்திய அணி சிறப்பாக விளையாடியது. அந்த அணியின் இரண்டு முக்கிய வீரர்கள் அற்புதமாக செயல்பட்டிருந்தனர். இந்தியா போன்ற வலுவான அணிகளுக்கு எதிராக 3 அல்லது 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட விரும்புகிறாம். இவ்வாறு தெம்பா பவுமா கூறினார்.
