

விசாகப்பட்டினம்: எதிர்வரும் 2027 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி விளையாடுவார்களா என்பது குறித்து அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்க அணி உடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது இந்திய அணி. சனிக்கிழமை அன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கம்பீர் பங்கேற்றார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அவற்றுக்கு அவர் பதில் அளித்தார்.
“ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள். அவர்களது அனுபவம் அணியில் இருப்பது முக்கியம் என கருதுகிறேன். தங்கள் அனுபவத்தை இளம் வீரர்களுடன் பகிர்ந்து வருகின்றனர். வரும் நாட்களிலும் இதை அவர் தொடருவார்கள். இது ஒருநாள் கிரிக்கெட் பார்மெட்டுக்கு முக்கியமானதாகும்.
2027 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடைபெற இன்னும் இரண்டு ஆண்ட காலம் உள்ளது. நாம் எப்போதும் நிகழ் காலத்தில் இருப்பது சிறப்பானது. இளம் வீரர்கள் தங்கள் வாய்ப்புகளை பற்ற காத்திருக்கின்றனர். ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் இந்த தொடரில் தங்களது திறனை வெளிப்படுத்தி உள்ளனர். தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை இறுகப்பற்றி, பயன்படுத்திக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு இந்த பார்மெட்டில் சிறந்த எதிர்காலம் இருப்பதாக கருதுகிறேன்” என்றார்.
கடந்த 2024-ல் டி20 உலகக் கோப்பையை வென்ற தருணத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா அறிவித்தனர். தொடர்ந்து நடப்பு ஆண்டில் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இருவரும் அடுத்தடுத்து அறிவித்தனர்.
இப்போது இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே இருவரும் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா உடனான ஒருநாள் தொடரில் இருவரும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.