

பும்ரா, கிளென் பிலிப்ஸ்
அகமதாபாத்: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் நாளை (மார்ச் 8) பலப்பரீட்சை செய்ய உள்ளன. இந்நிலையில், இந்திய வீரர் பும்ரா குறித்து தனது கருத்தை நியூஸிலாந்து அணியின் வீரர் கிளென் பிலிப்ஸ் பகிர்ந்துள்ளார்.
இந்த ஆட்டம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த ஆடுகளத்தில் செம்மண், கரிசல் மண் மற்றும் இரண்டையும் சேர்த்து ஹைபிரிட் என மூன்று வகையான ஆடுகளங்கள் உள்ளன. இதில் செம்மண் ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக அமையும். அதேபோல கரிசல் மண் ஆடுகளத்தில் பந்து வீச்சுக்கு உதவும். இந்த சூழலில் இந்த இரண்டின் கலவையாக உள்ள ஹைபிரிட் பிட்ச் இறுதிப் போட்டிக்கு பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து நியூஸிலாந்து வீரர் கிளென் பிலிப்ஸ் கூறியதாவது: “பும்ரா ஓர் அற்புத பவுலர். பந்து வீச்சில் நிறைய வேரியேஷனை தன்வசம் வைத்துள்ளார். குறிப்பாக டெத் ஓவர்களில் துல்லியமாக பந்து வீசி ரன்களை கட்டுப்படுத்துவார். அதை அனைவரும் அறிவோம். ஆனால், அவரும் ஒரு மனிதர் தானே. அவருக்கும் கிரிக்கெட்டில் ஒரு மோசமான நாள் அமையும். அது எங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும்.
மக்கள் தொகை எண்ணிக்கையில் சிறிய நாடான நாங்கள் உலக அளவில் பல்வேறு அணிகளுடன் விளையாடி வருகிறோம். இந்த தொடரில் மூன்று அணிகளை இந்தியா களமிறக்கும் திறன் கொண்டுள்ளது. அந்த அளவுக்கு இங்கு திறமையான வீரர்கள் உள்ளனர். அந்த வகையில் இந்தியாவுடன் நாங்கள் போட்டியிடுவதே அற்புதமானது” என்றார்.