

சென்னை: தமிழ்நாடு பிக்கிள்பால் பிரீமியர் லீக் (டிஎன்பிபிஎல்) சீசன் 2 அறிமுக நிகழ்ச்சி நேற்று சென்னை கிண்டியில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் லீக்கின் இயக்குநர் யோகேஷ், தமிழ்நாடு பிக்ளிள்பால் சங்கத்தின் தலைவர் மோஹித் குமார், செயலாளர் காவ்யா சோமேஷ் மற்றும் அணிகளின் உரிமையாளர்களான நடிகர் விக்ரம் (கடலூர் அணி), நடிகைகள் வரலட்சுமி (சென்னை அணி), கீர்த்தி பாண்டியன் (நெல்லை அணி) உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்தத் தொடரில் சென்னை தமிழ் டைட்டன்ஸ், கோயம்பத்தூர் ஸ்மாஷர்ஸ், கடலூர் கிங்ஸ், காஞ்சி பிளாக்பக்ஸ், கொடை டைகர்ஸ், மதுரை ஆல் ஸ்டார்ஸ், நெல்லை சூப்பர் ஸ்டார்ஸ், ஊட்டி பைசன்ஸ், ராம்நாடு ராயல்ஸ், ராக்போர்ட் திருச்சி, சேலம் சூப்பர் ஸ்மாஷர்ஸ், டிவின் ஈகிள்ஸ் ஒசூர் ஆகிய 12 அணிகள் கலந்து கொள்கின்றன.
தொடரில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு அணியும் தலா 14 வீரர்களை ஏலத்தின் வாயிலாக எடுப்பார்கள். இதற்காக ஒவ்வொரு அணியும் ரூ.36 லட்சம் வரை செலவிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிபிஎல் சீசன் 2 வரும் செப்டம்பர் 17 முதல் 20 வரை சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலின் நடுவில் அமைந்துள்ள பிரம்மாண்டமான திறந்தவெளி மையப் பகுதியில் நடைபெற உள்ளது.