

சென்னை: 7-வது ஹாக்கி இந்தியா லீக் தொடரின் முதல் கட்ட ஆட்டங்கள் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு டிராகன்ஸ் - எஸ்.ஜி.பைப்பர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டம் வழக்கமான நேரத்தின் முடிவில் 4- 4 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. தமிழ்நாடு டிராகன்ஸ் அணி சார்பில் அமித் ரோஹிதாஸ் (9-வது நிமிடம்), டாம் கிரேய்க் (18-வது நிமிடம்), பால் பிலிப் (17-வது நிமிடம்), செல்வராஜ் கனகராஜ் (40-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
எஸ்.ஜி.பைப்பர்ஸ் அணி தரப்பில் தாமஸ் டோமீன் 2 கோல்களும் (13 மற்றும் 18-வது நிமிடம்), கை வில்லட் (38-வது நிமிடம்), ஆதித்யா லாலேஜ் (59-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர். இதையடுத்து வெற்றியை தீர்மானிக்க நடத்தப்பட்ட பெனால்டி ஷூட்டில் தமிழ்நாடு டிராகன்ஸ் 5- 4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
தமிழ்நாடு டிராகன்ஸ் அணிக்கு இது ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது. அந்த அணி தனது முதல் இரு ஆட்டங்களில் ஹைதராபாத், சூர்மா கிளப் அணிகளை வீழ்த்தியிருந்தது. தமிழ்நாடு டிராகன்ஸ் அணி தனது அடுத்த ஆட்டத்தில் எஸ்.ஐ.எல்.ஜிசி. அணியுடன் நாளை (12-ம் தேதி) மோதுகிறது. இந்த ஆட்டம் ராஞ்சியில் நடைபெறுகிறது.