

கொல்கத்தா: டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றின் ஆட்டத்தில், மேற்கிந்திய தீவுகள் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. தோல்வியின் விளிம்பில் இருந்த இந்தியாவை, சஞ்சு சாம்சனின் அபாரமான பேட்டிங் வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1) நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய மேற்கிந்திய அணியின் ஷாய் ஹோப் (32) மற்றும் ரோஸ்டன் சேஸ் (40) ஜோடி 68 ரன்கள் சேர்த்து நல்ல தொடக்கத்தை கொடுத்தது.
ஜஸ்பிரித் பும்ரா மற்றும் வருண் சக்கரவர்த்தி தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தி ரன் வேகத்தைக் கட்டுப்படுத்த முயன்றனர். எனினும், ஜேசன் ஹோல்டர் 37 ரன்கள் ரோவ்மன் பவல் 34 ரன்கள் விளாசியதால், மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்தது.
196 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்குத் தொடக்கம் ஏமாற்றமாக அமைந்தது. அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் தலா 10 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர்.
ஆனால், ஒன்-டவுன் வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார். சூரியகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா ஆகியோருடன் பார்ட்னர்ஷிப் அமைத்த சஞ்சு, 50 பந்துகளில் 97 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 10 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.
கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சஞ்சு சாம்சன் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து 19.2 ஓவர்களிலேயே வெற்றியை உறுதி செய்தார்.
இதன் மூலம் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் சேஸிங்கின் போது அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை சஞ்சு சாம்சன் முறியடித்தார்.
இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிக்கு முன்னேறியுள்ள இந்திய அணி, மார்ச் 5-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளவுள்ளது.