

கோப்புப்படம்
சென்னை: அடுத்த மாதம் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ள டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காயம் காரணமாக ஓய்வில் உள்ள கம்மின்ஸ், ஹேசில்வுட் மற்றும் டிம் டேவிட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்தத் தொடர் வரும் பிப்ரவரி 7-ம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஒரு மாதம் நடைபெறும் இந்த டி20 கிரிக்கெட் திருவிழாவில் மொத்தம் 55 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. இவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இடம் பெற்றுள்ளன.
இதில் ‘பி’ பிரிவில் தொடரை நடத்தும் இலங்கை, ஆஸ்திரேலியா, அயர்லாந்து, ஓமன், ஜிம்பாப்வே ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், இந்த தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட ஆஸ்திரேலிய அணியை அறிவித்துள்ளது கிரிக்கெட் ஆஸ்திரேலியா. பிப்ரவரி 11-ம் தேதி இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா விளையாடுகிறது. அந்த அணியின் முதல் சுற்று ஆட்டங்கள் அனைத்தும் இலங்கையில் நடைபெறுகிறது.
ஆஸ்திரேலிய அணி விவரம்: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சேவியர் பார்ட்லெட், கூப்பர் கனோலி, கம்மின்ஸ், டிம் டேவிட், கேமரூரன் கிரீன், நேதன் எல்லிஸ், ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மேத்யூ குனேமன், கிளென் மேக்ஸ்வெல், மேத்யூ ஷார்ட், ஸ்டாய்னிஸ், ஆடம் ஸாம்பா.
ஆஸ்திரேலிய அணி எப்படி? - இந்தத் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுவதை கருத்தில் கொண்டு சுழற்பந்து வீச்சாளர்களை அணியில் அதிகம் சேர்த்துள்ளது ஆஸ்திரேலிய அணி. ஸாம்பா, ஷார்ட், மேக்ஸ்வெல் உள்ளிட்ட அனுபவ சுழற்பந்து வீச்சாளர்களுடன் இடது கை சுழற்பந்து வீச்சாளர்களான மேத்யூ குனேமன், கனோலி ஆகியோரும் அணியில் உள்ளனர். இது அணித்தேர்வில் சர்ப்ரைஸ். எனினும், இது உத்தேச அணிதான் என ஆஸ்திரேலிய அணி தேர்வுக்குழு தலைவர் ஜார்ஜ் பெய்லி தெரிவித்துள்ளார்.
காயம் காரணமாக ஓய்வில் உள்ள கம்மின்ஸ், ஹேசில்வுட் மற்றும் டிம் டேவிட் ஆகியோரும் தொடரின் போது உடற்தகுதி பெறுவார்கள் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மார்ஷ், ஹெட், இங்கிலிஸ், மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ் என அதிரடி பேட்ஸ்மேன்கள், எல்லிஸ், கம்மின்ஸ், ஹேசில்வுட் உள்ளிட்ட பவுலர்கள் அந்த அணியில் இடம்பெற்றுள்ளனர். இது அந்த அணிக்கு வலு சேர்க்கிறது. இதில் பெருபாலான வீரர்கள் ஐபிஎல் கிரிக்கெட் ஆடிய அனுபவம் கொண்டவர்கள் என்பது கவனிக்கத்தக்கது. மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ், கேமரூன் கிரீன், டிம் டேவிட் ஆகியோர் அனுபவ ஆல்ரவுண்டர்களாக அணியில் உள்ளனர்.