

சென்னை: ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு ‘டி’ பிரிவில் நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - கனடா அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகளுமே சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டன.
ஆப்கானிஸ்தான் தனது முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியிடம் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது. தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் வீழ்ந்திருந்தது. 3-வது ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது.
ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆல்ரவுண்டராக அஸ்மதுல்லா ஓமர்ஸாய் சிறப்பாக செயல்பட்டிருந்தார். இதேபோன்று இப்ராகிம் ஸத்ரன் அரை சதம் அடித்திருந்தார். இவர்கள் மீண்டும் ஒரு முறை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிக்கக்கூடும்.
கனடா அணி விளையாடிய 3 ஆட்டங்களிலும் தோல்வி அடைந்திருந்தது. எனினும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க வீரரான யுவராஜ் சம்ரா 110 ரன்கள் விளாசி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்ர். இதன் மூலம் டி 20 உலகக் கோப்பை வரலாற்றில் சதம் அடித்த இளம் வீரர் என்ற சாதனையையும் அவர், படைத்திருந்தார்.
அவரும் கேப்டன் தில்பரீத் பஜ்வாவும் முதல் விக்கெட்டுக்கு 116 ரன்கள் விளாசி மிரட்டியிருந்தனர். இவர்களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும். கனடா அணி பேட்டிங்கில் ஓரளவுக்கு சிறப்பாக செயல்படும் நிலையில் பந்துவீச்சில் நம்பிக்கை அளிக்கக்கூடிய வகையில் எந்த வீரரும் இல்லை. நியூஸிலாந்து அணிக்கு எதிராக 173 ரன்களை சேர்த்த போதிலும் வலுவில்லாத பந்துவீச்சால் வெற்றி பெறுவதற்கான வழியை கண்டறிய முடியாமல் போனது.
எப்படி இருப்பினும் இந்த ஆட்டம் கடைசி போட்டி என்பதால் தொடரை சிறந்த முறையில் நிறைவு செய்ய கனடா அணி முயற்சிக்கக்கூடும். மே.இ.தீவுகள் - இத்தாலி முன்னதாக காலை 11 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ‘சி’ பிரிவில் நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் - இத்தாலி அணிகள் மோதுகின்றன.
இரு முறை சாம்பியனான மேற்கு இந்தியத் தீவுகள் அணி ஹாட்ரிக் வெற்றிகளுடன் தனது பிரிவில் முதல் அணியாக சூப்பர் 8 சுற்றில் கால்பதித்து இருந்தது. இன்றைய ஆட்டத்திலும் அந்த வெற்றியை வேட்டையை தொடருவதில் முனைப்பு காட்டக்கூடும்.
பிற்பகல் 3 மணிக்கு கொழும்பு நகரில் ‘பி’ பிரிவில் நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை, ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகளுமே சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிவிட்டன. இதனால் இன்றைய ஆட்டத்தை இந்த அணிகள் சிறந்த பயிற்சி ஆட்டமாக பயன்படுத்திக் கொள்ளக்கூடும்.