தமிழகத்தின் 6 இடங்கள் உட்பட மாநிலங்களவையில் காலியாகும் 37 இடங்களுக்கு மார்ச் 16-ல் தேர்தல்

தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு
கோப்புப்படம்

கோப்புப்படம்

Updated on
2 min read

புதுடெல்லி: தமிழ்நாடு உட்பட 10 மாநிலங்களில் காலியாகவுள்ள 37 மாநிலங்களவை இடங்களுக்கு மார்ச் 16-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மகாராஷ்டிரா (7), தமிழ்நாடு (6), பிஹார் (5), மேற்கு வங்கம் (5), ஒடிசா (4), அசாம் (3), தெலங்கானா (2), சத்தீஸ்கர் (2), ஹரியானா (2), இமாச்சலப் பிரதேசம் (1) ஆகிய 10 மாநிலங்களின் 37 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக் காலம் வரும் ஏப்ரல் 2 முதல் 9-ம் தேதிக்குள் முடிவடைய உள்ளன.

இதன்படி, தேசியவாத காங்கிரஸ் (எஸ்பி) தலைவர் சரத் பவார், சிவசேனாவின் பிரியங்கா சதுர்வேதி, குடியரசுக் கட்சித் தலைவர் ராம்தாஸ் அத்வாலே, காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி, மாநிலங்களவைத் துணைத் தலைவரும் ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவருமான ஹரிவன்ஷ் நாராயண் சிங் ஆகியோரின் மாநிலங்களவை எம்.பி. பதவிக்காலம் முடிவடைய உள்ளது.

இந்நிலையில், ஏப்ரல் மாதம் காலியாக உள்ள 37 மாநிலங்களவை எம்.பி. பதவிக்கான தேர்தல் மார்ச் 16-ம் தேதி நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இந்த தேர்தலுக்கான அறிவிக்கை பிப்.26-ம் தேதி வெளியிடப்படும் என்றும், அன்று முதல் மார்ச் 5-ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மார்ச் 6-ம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். 9-ம் தேதிக்குள் மனுக்களை திரும்பப் பெறலாம். போட்டி இருந்தால் மார்ச் 16-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும் என ஆணையம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா, ஒடிசா, பிஹார், சத்தீஸ்கர், ஹரியானா, அசாம் ஆகிய மாநிலங்களில் பாஜக தனியாகவோ அல்லது கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடனோ ஆட்சியில் உள்ளது. எனவே, இந்த தேர்தல் மூலம் மாநிலங்களவையில் பாஜகவின் பலம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.க்களாக உள்ள திருச்சி சிவா, கனிமொழி சோமு, என்.ஆர் இளங்கோ, அந்தியூர் செல்வராஜ் ஆகிய திமுக.வினரும், அதிமுகவின் தம்பிதுரை, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகிய 6 பேரின் பதவி காலம் ஏப்ரல் மாதத்துடன் முடிய இருக்கிறது. இதற்கான தேர்தல் மார்ச் 16-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பிரதிநிதித்துவ அடிப்படையில் திமுகவுக்கு 4 இடங்களும், அதிமுகவுக்கு 2 இடங்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.

இதையடுத்து, திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகளிலும் மாநிலங்களவை இடங்களை பிடிக்க பலர் போட்டி போடுகின்றனர். திமுகவில் திருச்சி சிவாவுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் எனவும், மீதமுள்ள 3 இடங்களுக்கு திமுகவில் முன்னணி நிர்வாகிகள் பலர் ஆர்வமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி ஒரு மாநிலங்களவை இடம் வேண்டும் என கேட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேபோல், அதிமுகவின் 2 இடங்களில் ஒன்று, தம்பிதுரைக்கு வழங்கப்படும் என்று தெரிகிறது. மற்றொரு இடத்தை கூட்டணிக் கட்சிக்கு விட்டுக் கொடுக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், கூட்டணியில் உள்ள பாமக (அன்புமணி), தமாகா, அமமுக ஆகிய கட்சிகள் அந்த ஒரு இடத்தை பெற முயற்சித்து வருகின்றன. மேலும், கூட்டணிக்கு வருவதற்கு ஒரு மாநிலங்களவை இடத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என தேமுதிக கோரிக்கை வைத்து வருகிறது. இதனால் பாதகம் இல்லாமல் யாருக்கு அந்த இடத்தை வழங்குவது என அதிமுக தலைமை ஆலோசித்து வருவதாக அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தேர்தல் அதிகாரிகள் நியமனம்: மாநிலங்களவை காலியிடங்களுக்கு தேர்தல் நடத்து வதற்கான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘தலைமைத் தேர்தல் ஆணையம், தமிழக சட்டப்பேரவைச் செயலகத்தின் கூடுதல் செயலாளரை தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும், இணைச் செயலாளரை உதவி தேர்தல் அதிகாரியாகவும் நியமனம் செய்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>கோப்புப்படம்</p></div>
நெதர்லாந்தை 17 ரன்களில் வென்றது இந்தியா: ஷிவம் துபே அபாரம்! - T20 WC 2026

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in