

ஹைதராபாத்: சையது முஸ்டாக் அலி டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று ஹைதராபாத்தில் உள்ள ஜிம்கானா மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் பரோடா - சர்வீசஸ் அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த பரோடா அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 220 ரன்கள் குவித்தது. அறிமுக வீரராக களமிறங்கிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அமித் பாஸி 55 பந்துகளில், 9 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 114 ரன்கள் விளாசினார்.
இதன் மூலம் அறிமுகமான டி 20 போட்டியில் அதிக ரன்கள் விளாசியிருந்த பாகிஸ்தானின் பிலால் ஆசிப்பின் சாதனையை அமித் பாஸி சமன் செய்தார்.
பிலால் ஆசிப் கடந்த 2015ம் ஆண்டு மே மாதம் உள்நாட்டு தொடரில் சியால்கோட் ஸ்டாலியன்ஸ் அணிக்காக களமிறங்கி 48 பந்துகளில் 114 ரன்கள் சேர்த்திருந்தார். இதுவே உலக சாதனையாக இருந்தது. இதை தற்போது அமித் பாஸி சமன் செய்துள்ளார்.
மேலும் இந்திய வீரர்களில் அறிமுக போட்டியில் சதம் விளாசிய 3-வது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் அமித் பாஸி. இதற்கு முன்னர் பஞ்சாப் அணியை சேர்ந்த ஷிவம் பாம்ப்ரி, பிஏ ரெட்டி ஆகியோரும் சதம் அடித்திருந்தனர்.
இந்த 3 சதங்களுமே சையது முஸ்டாக் அலி டி 20 தொடரில் அடிக்கப்பட்டது தான். பரோடா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 221 ரன்கள் இலக்கை துரத்திய சர்வீசஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.