

இலைக் கட்சியிலிருந்து வெட்டிவிடப்பட்ட ‘வாசனைத்’ தலைவர் காவித் தலைவர்களை கார்னர் செய்து எதையாவது காரியம் சாதிப்பார் என நினைத்தவர்கள், ’அவசரப்பட்டு இவர் பின்னால் வந்துவிட்டோமோ’ என கையைப் பிசைந்துகொண்டு நிற்கிறார்களாம். அதில் ஒருசில புத்திசாலிகள், இனியும் இவரை நம்பிக் கொண்டிருந்தால் மோசம் போய்விடுவோம் என்று முடிவுக்கு வந்து, மாற்றுக் கட்சி முகாம்களுக்கு மனுப்போட்டு வருகிறார்கள்.
டெல்டாவைச் சேர்ந்த ‘ட்ரீட்மென்ட்’ புள்ளி மீண்டும் தாய்க்கழகமா அல்லது பனையூர் பார்ட்டியா என ஒத்தையா ரெட்டையா போட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கிறாராம். “நீங்க எங்கிட்டுப் போனாலும் என்னையும் சேர்த்துக்குங்கண்ணே” என்று அவரிடம் ரிசர்வ் செய்து வைத்திருக்கிறாராம் மலைக்கோட்டை மாநகரின் ‘ஸ்வீட்’ மண்டி புள்ளி.
இதனிடையே, வாசனைத் தலைவரை வழியிலேயே விட்டு விட்டு ஆலயக் கட்சிக்குப் புறப்பட்ட ‘பாண்டியப்’ புள்ளி, வாசனை தலைவரின் குழுவில் இருப்பவர்களை தேடிப்பிடித்து ஆலயக் கட்சிக்கு திருப்பிவிடுகிறாராம்.
முன்னதாக வாசனைத் தலைவரின் மாவட்டச் செயலாளர்கள் இருவரை தள்ளிக்கொண்டு வந்தவர், இப்போது விருதுநகர் மாவட்டத்தில் தாய்க் கழகத்தில் ‘திருப்பதி’ கடவுளால் ஓரங்கட்டப்பட்ட நபர்களை சாதி ரீதியாகப் பேசி மடக்கி வருகிறாராம். இவரது ‘மடக்குப்’ பட்டியலில் மோதிரக் குத்துக்கு பேர் போன பழம்பெரும் அரசியல் ‘கனி’யின் வாரிசு ஒருவரும் இருக்கிறாராம்.