3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது சன்ரைசர்ஸ் அணி - SA20 லீக்

3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது சன்ரைசர்ஸ் அணி - SA20 லீக்
Updated on
1 min read

கேப் டவுன்: நடப்பு எஸ்ஏ20 லீக் கிரிக்கெட்டில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த லீக்கில் மூன்றாவது முறையாக அந்த அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

தென் ஆப்பிரிக்க நாட்டில் எஸ்ஏ20 ஃப்ரான்சைஸ் லீக் கிரிக்கெட் நடைபெற்றது. ஆறு அணிகள் இந்த சீசனில் பங்கேற்றன. இதில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் பிரெட்டோரியா கேபிடல்ஸ் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இந்தப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி பந்துவீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த கேபிடல்ஸ் அணி, 20 ஓவர்களில் 7 இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் பேட்ஸ்மேன் டெவால்ட் பிரேவிஸ், 56 பந்துகளில் 101 ரன்கள் எடுத்தார். 8 ஃபோர்கள் மற்றும் 7 சிக்ஸர்களை அவர் விளாசினார். பிரைஸ் பார்சன்ஸ் 30 ரன்கள் எடுத்தார். சன்ரைசர்ஸ் அணி சார்பில் மார்கோ யான்சன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 4 ஓவர்களில் வெறும் 10 ரன்களை மட்டுமே அவர் கொடுத்திருந்தார். இதில் ஒரு மெய்டன் ஓவரும் அடங்கும்.

159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை சன்ரைசர்ஸ் அணி விரட்டியது. 8.4 ஓவர்களில் 48 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது அந்த அணி. 5-வது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்த மேத்யூ பிரெட்ஸ்கீ மற்றும் கேப்டன் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் இணைந்து 114 ரன்கள் சேர்த்தனர்.

கடைசி ஓவரில் சன்ரைசர்ஸ் அணியின் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. அந்த அவரின் முதல் இரண்டு பந்துகளில் இரண்டு சிக்ஸர்கள் விளாசி வெற்றியை உறுதி செய்தார் ஸ்டப்ஸ். இதன் மூலம் அந்த அணி சாம்பியன் ஆனது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஸ்டப்ஸ் 63 மற்றும் பிரெட்ஸ்கீ 68 ரன்கள் எடுத்தனர். இதில் ஆட்டநாயகன் விருதை பிரேவிஸ் வென்றார்.

3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது சன்ரைசர்ஸ் அணி - SA20 லீக்
“என் பேட்டிங்கில் 10 மடங்கு முன்னேற்றம்” - மெக்கல்லமுக்கு ஜோ ரூட் கொடுத்த ‘முட்டு’

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in