சுனில் கவாஸ்கர்
‘பாகிஸ்தான் புறக்கணிப்பு எத்தகையது?’ - கவாஸ்கர் காட்டம் | T20 WC 2026
மும்பை: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரை பாகிஸ்தான் அணி முழுவதுமாக புறக்கணித்திருக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை - 2026ம் ஆண்டுக்கான தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்றது வருகிறது. மொத்தம் 20 அணிகள் இதில் பங்கேற்றுள்ளன. குரூப்-ஏ பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்த அணிகளுக்கு இடையிலான ஆட்டம் வரும் 15-ம் தேதி கொழும்பில் நடைபெறும் என ஐசிசி அறிவித்தது.
இந்த சூழலில் இந்தியாவில் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவுகின்ற காரணத்தால் தங்கள் அணி விளையாடும் ஆட்டங்கள் மட்டும் இலங்கைக்கு மாற்றப்பட வேண்டும் என வங்கதேச கிரிக்கெட் அணி, ஐசிசி-யை நாடியது. அதற்கு ஐசிசி மறுப்பு தெரிவித்துவிட்டது. இருப்பினும் இந்தியாவில் விளையாட வங்கதேசம் மறுத்துவிட்டது. அதனால் அந்த அணிக்கு பதிலாக ஸ்காட்லாந்து அணி தொடரில் விளையாடும் என ஐசிசி தெரிவித்தது.
இந்நிலையில், அதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கண்டனம் தெரிவித்தது. தொடர்ந்து அந்நாட்டு அரசின் வழிகாட்டுதலின்படி இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அறிவித்தது. இது தொடர்பாக ஐசிசி மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல். இந்த சூழலில் சுனில் கவாஸ்கர் எழுதியுள்ள கட்டுரையில் கூறியுள்ளதாவது:
வங்கதேச அணியின் கோரிக்கையை ஐசிசி ஏற்கவில்லை. இலங்கைக்கு போட்டியை மாற்றுவதில் எந்தவித காரணமும் இல்லை என கருதியது. அதை வாக்கெடுப்பு மூலம் ஐசிசி உறுதி செய்தது. பாகிஸ்தானை தவிர வங்கதேசத்துக்கு ஆதரவாக எந்தவொரு அணியும் நிற்கவில்லை. இது தொடர்பாக இறுதி முடிவெடுக்க இரண்டு நாள் அவகாசம் கொடுக்கப்பட்டது. அதன் பிறகு ஸ்காட்லாந்து மாற்று அணியாக இடம்பெற்றது.
வங்கதேசத்தில் அரசியல் ரீதியாக ஸ்திரமற்ற நிலை ஏற்பட்டுள்ளது. விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதை தங்களுக்கு சாதகமாக அமைத்துக் கொள்ள பாகிஸ்தான் பார்க்கிறது. அதனால் அவர்களின் அரசு டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க அந்த அணிக்கு அனுமதி வழங்கி உள்ளது. ஆனால், இந்தியாவுடன் விளையாட மறுத்துள்ளது. ஐசிசி, வங்கதேசத்துக்கு அநீதி வழங்கியதாக பாகிஸ்தான் கருதினால் இந்தியாவுடனான ஆட்டம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த டி20 உலகக் கோப்பை தொடரை புறக்கணித்திருக்க வேண்டும்.
சிலர் இந்த சம்பவத்தை சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் ஒப்பிட்டு பேசி வருகின்றனர். பாகிஸ்தானில் நடந்த அந்த தொடரில் இந்தியா பங்கேற்காது என தெளிவாக சொல்லப்பட்டது. அப்போது அந்த தொடருக்கான அட்டவணை கூட தயாராகவில்லை. இந்தியாவின் நிலைப்பாடு காரணமாக அந்த தொடரில் இந்திய அணி ஆடிய ஆட்டங்கள் அனைத்தும் பொதுவான மைதானத்தில் நடைபெற்றது.
இலங்கை மீதான தாக்குதலுக்கு பிறகும் பாகிஸ்தானில் சென்று கிரிக்கெட் விளையாடியது. 1996 உலகக் கோப்பை தொடரில் பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கையில் விளையாட ஆஸ்திரேலியா மறுத்துவிட்டது. 2003 உலகக் கோப்பை தொடரில் அரசியல் நிலைப்பாடு காரணமாக ஜிம்பாப்வே நாட்டில் இங்கிலாந்து விளையாட மறுத்துவிட்டது. இப்படி வரலாறு இருக்கிறது. ஆனால், இப்போது ஐசிசி எடுக்கின்ற முடிவுக்கு பிசிசிஐ மீது பழி சுமத்தப்பட்டுள்ளது என கூறியுள்ளது.
