கே.சந்திரசேகர் ராவ் | கோப்புப் படம்

கே.சந்திரசேகர் ராவ் | கோப்புப் படம்

கே.சந்திரசேகர ராவ்: சரிவை நோக்கிய சகாப்தமா?

தெலங்கானாவில் ‘மண்ணின் மைந்தன்’ அரசியல் 2026-ல் மீண்டெழுமா?
Published on

தெலங்கானா மாநிலம் பிறந்து 12 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஒரு தசாப்த காலம் அம்மாநிலத்தின் அசைக்க முடியாத அரசியல் சக்தியாக விளங்கிய கே.சந்திரசேகர் ராவ் (கே.சி.ஆர்), இன்று தனது அரசியல் வாழ்வின் மிகச் சவாலான காலகட்டத்தில் நிற்கிறார். தனி மாநிலம் கோரிய போராட்ட அரசியலின் மையமாக மாறி, அவர் முன்னெடுத்த உணர்ச்சிகரமான அரசியல், தெலங்கானா பிறந்தபோது அவருக்கு ஆட்சிக் கட்டிலை வழங்கியது.

ஆனால், அவரது 10 ஆண்டுக்கால ஆட்சியின் நிர்வாகச் சிக்கல்கள், பிரம்மாண்டமான காலேஸ்வரம் பாசனத் திட்டம், பாரிய கடன் சுமை, தேசிய அரசியல் ஆசை, ஆகியவற்றுடன் குடும்ப அரசியல் குழப்பமும் சேர்ந்துகொண்டபோது அவர் ஆட்சியதிகார அரசியலில் சரிவை எதிர்கொள்ளத்தொடங்கினார். குறிப்பாக 2024 மக்களைவைத் தேர்தலில் அவரின் பிஆர்எஸ் (BRS) கட்சி ஓர் இடத்தைக் கூட வெல்லமுடியாமல் பெரும் ஏமாற்றத்தைச் சந்தித்தது.

இந்நிலையில், பிப்ரவரி 11-ஆம் தேதி நடைபெறவிருக்கும் 7 மாநகராட்சிகள், 116 நகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் மூலம், பி.ஆர்.எஸ். முன்னெடுத்த ‘மண்ணின் மைந்தன்’ அரசியல் மீட்சி பெறுமா என்பதுதான் தெலங்கானா மாநில அரசியல் களத்தில் தற்போதைய விலைமதிப்பற்ற கேள்வி.

வளர்ச்சியும் கடன் சுமையும்:

கே.சி.ஆர். ஆட்சியிலிருந்த பத்து ஆண்டுகளில் (ஜூன் 2, 2014 முதல் டிசம்பர் 7, 2023) தெலங்கானா அடைந்த வளர்ச்சியை பி.ஜே.பியாலும் மறுக்க முடியாதது. ஆனால், அந்த வளர்ச்சிக்கு அவர் கொடுத்த விலைதான் மிகப் பெரியது. 2014இல் தெலுங்கானா உருவானபோது மாநிலத்தின் கடன் சுமை சுமார் ரூபாய் 75,577 கோடியாக இருந்தது. ஆனால், 2024இல் அவர் பதவியிலிருந்து விலகும்போது, சுமார் ரூ.7 லட்சம் கோடியாக (பட்ஜெட்டுக்கு வெளியே வாங்கப்பட்ட கடன்களையும் சேர்த்து) உயர்ந்திருந்தது.

நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தது அவரது கனவுத் திட்டமான ‘காலேஸ்வரம் நீரேற்றுப் பாசனத் திட்டம்’. இது உலகின் மிகப்பெரிய பன்நிலை நீரேற்று நீர்ப்பாசனத் திட்டம்! கடல் மட்டத்திலிருந்து 100 மீட்டர் உயரத்தில் பாயும் கோதாவரி ஆற்றிலிருந்து 240 டிம்.எம்.சி. தண்ணீரை, மேடிகட்டா, அன்னாரம், சுண்டில்லா ஆகிய இடங்களில் தடுப்பணைகள் கட்டி, பிரம்மாண்ட பம்புகள் மூலம் நீரை இறைத்து இன்னும் உயரமான பகுதிகளுக்கு நீர் சுரங்கம், கால்வாய்கள் வழியாக நீரற்றம் செய்து புதிய பகுதிகளுக்குப் பாசனம், குடிநீர் மற்றும் தொழில் தேவைக்குத் தண்ணீரை வழங்கும் பிரம்மாண்டத் திட்டம் (இத்திட்டம் மெடிகட்டா அணைத் தூண்களில் ஏற்பட்ட சேதத்தால் நிறுத்து வைக்கப்பட்டுள்ளது).

‘காலேஸ்வரம் உள்ளிட்ட அடிப்படைக் கட்டுமானத் திட்டங்களுக்காக வாங்கப்பட்ட கடன்கள் 100 சதவீதம் எதிர்பார்த்த பலனை அளிக்காததோடு, மாநிலத்தின் நிதி ஆதாரத்தைச் சிதைத்துவிட்டதாகக் குற்றம்சாட்டுகிறது தற்போது ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் காங்கிரஸ் அரசு. அது தனது தேர்தல் வாக்குறுதிகளைச் சரிவர நிறைவேற்ற முடியாமல் திணறுவதற்கு, கே.சி.ஆர். விட்டுச் சென்ற இந்தக் கடன் சுமையே காரணம் என்று பிரச்சாரம் செய்கிறது. அது உண்மையும் கூட என்று அரசியல் சார்பற்ற பொருளில் அறிஞர்கள் தெலங்கானாவின் கடன் சுமை குறித்து எச்சரித்து வருகிறார்கள். ‘வரி வருவாயில் பெரும் பகுதியை வட்டி கட்டுவதற்கே செலவிடும்போது, மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களில் கைக்கும் வாய்க்கும் எட்டாத நிலை உருவாக்கிவிடும்’ என்பதற்கு தெலங்கானா எடுத்துக்காட்டாக மாறி நிற்கிறது’ என அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

காலேஸ்வரம் திட்டத்தின் தற்காலிகத் தோல்வியும் பாரிய கடன் சுமையும் சந்திரசேகர ராவ் ஆட்சியை வீழ்த்தியதில் முக்கிய பங்கு வகித்தன என்று சொல்லப்பட்டாலும், விவசாயிகள், தலித்துகளின் பொருளாதார முன்னேற்றமே மாநிலத்தின் முன்னேற்றம் என கே.சி.ஆர். உணர்ந்து அவர் அறிமுகப்படுத்தி, செயல்படுத்திக்காட்டிய பல முக்கிய திட்டங்களை மொத்த தேசமும் திரும்பிப் பார்த்து வியந்து.

அவற்றில், ‘ரைத்து பந்து’ (Rythu Bandhu) - விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ஒரு பருவத்துக்கு ரூபாய் 5000 வீதம் இரண்டு பருவங்களுக்கு 10ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கும் திட்டம் இந்தியாவுக்கே முன்னோடித் திட்டமாக அமைந்தது. அதேபோல், ‘தலித் பந்து’ (Dalit Bandhu) திட்டத்தின் மூலம், பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கிய நிலையிலிருக்கும் தலித் குடும்பங்கள் சுயதொழில் தொடங்க 10 லட்சம் ரூபாயை முழுவதும் மானியமாக வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது அதிர்வலைகளை உருவாக்கியது. அதனோடு, மிஷன் பகீரதா (Mission Bhagiratha) திட்டத்தின் மூலம் தெலங்கானாவின் ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தையும் அவர் கையிலெடுத்தார். இப்படி இன்னும் பல திட்டங்களை அறிமுகப்படுத்த அவர் துடியாய் துடித்தார். ஆனால், மூன்றாம் முறை அவரது கட்சி ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போனது பெரும் துரதிஷ்டம்!

தேசிய நகர்வும் பாஜகவின் சீற்றமும்:

கே.சி.ஆரின் சரிவுக்கான தொடக்கப் புள்ளி, அவரது ‘தேசிய அரசியல்’ என்கிற நகர்வுதான். 2022இல் தனது தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியை (டி.ஆர்.எஸ்), பாரத் ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்) என்கிற பெயரில் தேசியக் கட்சியாக மாற்றினார். நாட்டின் ஜனநாயகக் கூட்டாட்சி உணர்வைப் பாதுகாக்க, பாஜக - காங்கிரஸ் கட்சிகளுக்கு மாற்றாக, வலிமையான வாக்கு வங்கியைக் கொண்டிருக்கும் மாநிலக் கட்சிகளை ஓரணியில் திரட்டிவிட முடியும் என்று நம்பியே இந்த நகர்வை அவர் முன்னெடுத்தார். தெலங்கானாவைத் தாண்டி மகாராஷ்டிரா, கர்நாடகா எனத் தனது கட்சியின் எல்லையை அவர் விரிவுபடுத்த முயன்றார். அதுவரை மத்திய அரசுடன் ஓர் இணக்கமான போக்கைக் கடைப்பிடித்து வந்த அவர், மத்திய பாஜக அரசையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினார்.

இதன் விளைவாக, பாஜக தனது முழுப் பலத்தையும் தெலுங்கானாவில் இறக்கியது. ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சியிலிருந்தபோது வெடித்துக் கிளம்பிய டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் கே.எஸ்.ஆரின் மகள் கவிதா கைது செய்யப்பட்டதும், சிறை சென்றதும் சட்டப் போராட்டங்களை எதிர்கொண்டதும் அவரது தேசிய அரசியல் கனவுக்கு வைக்கப்பட்ட முற்றுப்புள்ளி என்று அரசியல் நோக்கர்களால் விமர்சிக்கப்பட்டது. அதை உறுதி செய்வதுபோல், நிதிஷ்குமார் பாஜகவின் பக்கம் சாய்ந்தார். கெஜ்ரிவால் சிறைக்குச் சென்றதில் ஆட்சியை இழந்தார். மம்தா தனித்துக் களமாடவே அதிகமும் விரும்புகிறார், மு.க.ஸ்டாலினும் திமுகவும் தனித்து பா.ஜ.கவை எதிர்க்கவே விரும்புகின்றனர் என்கிற சூழல், கே.சி.ஆரின் அணி சேர்க்கும் லட்சியத்தைத் தகர்த்துவிட்டது.

கே.சி.ஆரின் அரசியலைக் கையிலெடுத்த காங்கிரஸ்:

தெலங்கானா வாக்காளர்களின் மனதில், ‘தெலங்கானா மாநிலக் கோரிக்கையை அங்கீகரித்து உருவாக்கிய தாய், மத்தியில் ஆண்ட காங்கிரஸ் கட்சி’ என்கிற பிடிப்பு, அழிக்க முடியாத அபிமானமாக இருந்து வருகிறது. அதைச் சரியான தருணத்தில் பயன்படுத்திக்கொண்டார் காங்கிரஸ் கட்சியின் ரேவந்த் ரெட்டி (தற்போதைய முதல்வர்).

கே.சி.ஆர். ஆட்சியில் அமர்ந்து, அதிகாரம் நிலைபெற்ற பிறகு அவரது இரண்டாவது ஐந்தாண்டு ஆட்சியின் நிர்வாகத் திறன் மீதான கேள்விகளும் அவரது அரசியல் வாரிசுகளான மகனும் மகளும் செலுத்தும் குடும்ப ஆதிக்கம் குறித்த விமர்சனங்களும் மேலெழுந்து வந்தபோது அதைத் திறமையாகத் தன் அரசியலுக்கு ரேவந்த் ரெட்டி பயன்படுத்திக்கொண்டார். அவர், கே.சி.ஆரின் அதே 'மண்ணின் மைந்தன்' பாணி அரசியலைப் பின்பற்றி, அதனுடன் 'மக்கள் நலன்' என்ற அம்சத்தையும் சேர்த்துக் கொண்டார். அதைப் பிரச்சாரமாக முன்வைத்து ஆட்சியைப் பிடித்தார்.

காங்கிரஸின் நலத்திட்டப் போர்:

தற்போது ஆட்சியில் இருக்கும் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு, 'ஆறு வாக்குறுதிகள்' மூலம் மக்களின் அன்றாடத் தேவைகளை நேரடியாகத் தொட்டுள்ளது. பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம், 200 யூனிட் இலவச மின்சாரம் ரூபாய் 500க்கு எரிவாயு சிலிண்டர் போன்ற திட்டங்கள், கே.சி.ஆரின் பிரம்மாண்டமான காலேஸ்வரம் போன்ற திட்டங்களை விடவும் எளிய மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றுவிட்டன.

“கே.சி.ஆர். ஆட்சியில், பல்லாயிரம் கோடி மக்கள் பணம் வீணடிக்கப்பட்டது. முந்தைய அரசின் தவறுகளைத் திருத்தி சரிசெய்யவேண்டிய வேலையும் எங்களுக்குக் கூடுதல் சுமையாகிவிட்டது” என்று கூறிக்கொண்டு ரேவந்த் ரெட்டி வாக்கரசியலில் தனது செல்வாக்கை நிலைநிறுத்திக்கொண்டார். விளைவாகக் கடந்த டிசம்பரில் நடந்த கிராம ஊராட்சிகளுக்கான தேர்தலில் பெரும் வெற்றியை அள்ளி, வாக்கு சதவீதத்திலும் வென்ற கிராம, ஒன்றிய ஊராட்சிகளின் எண்ணிக்கையிலும் முதலிடத்தைப் பிடித்த கட்சியாகக் காங்கிரஸை மாற்றிக்காட்டியிருக்கிறார்.

பாஜகவின் ‘சைலண்ட்’ வளர்ச்சி:

இதற்கிடையில் 2026இல் தெலுங்கானா அரசியலில் கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு முக்கிய அம்சம் ப.ஜகவின் படிப்படியான வளர்ச்சி. 2024 மக்களவைத் தேர்தலில் 8 இடங்களை வென்றதன் மூலம், பா.ஜ.க இப்போது மாநிலத்தில் 'இரண்டாவது பெரிய சக்தி' என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது. பி.ஆர்.எஸ். கட்சி பலவீனமடைந்து வரும் நிலையில், காங்கிரஸை எதிர்க்கும் பிரதான சக்தியாக நகர்புற மக்கள் பாஜகவை நோக்கி நகர்ந்து வருவதைக் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

அதேநேரம், கடந்த டிசம்பரில் நடந்து முடிந்த கிராமப் பஞ்சாயத்துத் தேர்தல் முடிவுகள் பாஜக கிராம மக்களிடம் ஆதரவைப் பெற்றிருக்கவில்லை என்பதையே காட்டுகிறது. தெலங்கானா மாநில பாஜகவின் முக்கிய முகங்களாக இருக்கும் கிஷன் ரெட்டி, பண்டி சஞ்சய் போன்ற தலைவர்கள், மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் தீவிரமாகச் செயல்பட்டுவருகின்றனர்.

கே.சி.ஆரின் எதிர்காலம்:

தற்போது 70 வயதைக் கடந்த நிலையில் இருக்கும் கே.சி.ஆருக்கு, 2026 என்பது அவரது அரசியல் வாழ்வின் இறுதிப் போராட்டக் களம் என தெலங்கானா ஊடகங்கள் வருணிக்கின்றன. தனது மகன் கே.டி.ஆரிடம் கட்சியின் பொறுப்புகளை முழுமையாக ஒப்படைத்துவிட்டு, அவர் ஒரு ஆலோசகராக மட்டுமே செயல்பட வேண்டிய கட்டாயத்துக்கு அவரைக் காலம் தள்ளியிருக்கிறது.

மகள் கவிதாவை கட்சியிலிருந்து நீக்கிய நிலையில், அவர், கடந்த 20 ஆண்டுகளாக தெலங்கானா பெண்களோடும் இளைஞர்களோடும் கள அரசியல் செய்து வரும் ‘தெலங்கானா ஜாக்குருதி’ அமைப்பைத் தனது தனித்த அரசியல் பாதையாக உருவாக்கி 50க்கும் அதிகமான வார்டுகளில் தனது வேட்பாளர்களை அவர் இந்த நகராட்சித் தேர்தலில் நிறுத்தியிருக்கிறார். மகள் தரும் இந்த வலியோடு, பி.ஆர்.எஸ் கட்சியின் பல தலைவர்கள் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க பக்கம் தாவி வருவது, அவரது கட்சியின் கட்டமைப்பைப் பலவீனப்படுத்தி வருகிறது.

என்றாலும் கே.சி.ஆரின் 'மண்ணின் மைந்தன்' அரசியல் முழக்கம் இன்னும் காலாவதியாகிவிடவில்லை. ‘தெலங்கானாவின் தந்தை’ என்கிற அவரின் முகம் மங்கிவிட வில்லை. ஆனால், அவர் தனது அரசியல் அதிகார வெற்றியை மீட்டெடுக்க அது மட்டுமே போதாது. காங்கிரஸின் நலத்திட்டங்கள் ஒருபுறம் நிதி நெருக்கடியைச் சந்தித்தாலும், அவை மக்களிடம் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன.

அதே நேரத்தில், பா.ஜ.க ஒரு தேசிய மாற்றாக உருவெடுத்து வருவது தெலங்கானாவில் ஒரு மும்முனைப் போட்டிக்கு கால் கோலியிருக்கிறது. வரும் காலங்களில், தனது தவறுகளைச் சரிசெய்து கொண்டு கே.சி.ஆர் மீண்டு வருவாரா அல்லது தெலங்கானா 'காங்கிரஸ் - பா.ஜ.க' இடையிலான இருமுனைக் களமாக மாறிட இடம் கொடுப்பாரா என்பதை நாளை மறுநாள் நடைபெறவிருக்கும் ஹைதராபாத் நீங்கலான மாநகராட்சி மற்றும் நகராட்சித் தேர்தல்களின் முடிவுகள் சொல்லிவிடும்.

<div class="paragraphs"><p>கே.சந்திரசேகர் ராவ் | கோப்புப் படம்</p></div>
‘தைரியம் இல்லாததால் மக்களவைக்கு பிரதமர் மோடி வரவில்லை’ - காங். பெண் எம்.பி.க்கள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in