

பெர்த்: கடந்த 2018-ம் ஆண்டு பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் மற்றும் கேமரூன் பேன்கிராப்ட் ஆகியோர் சிக்கினார். இந்நிலையில், இது குறித்து தனது சுயசரிதை நூலில் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா எழுதியுள்ளார்.
‘Sabr’ என்ற தலைப்பு கொண்ட அந்த சுயசரிதை நூலில் பந்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பான சில குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்துள்ளார். 2018-ல் நடந்த அந்த விவகாரத்தில் ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணிக்கும் தொடர்பு இருந்தது என்பதுதான் அவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு. இதற்கு வார்னர் ஆதரவு தெரிவித்திருந்தார். இந்நிலையில், கவாஜாவின் கருத்தை ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் ஸ்டார்க் நிராகரித்துள்ளார்.
“களத்துக்கு என்ன கொண்டு வரப்பட்டது என்பது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. இதை 2021-ல் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தோம். நடந்ததை கேப்டவுன் மைதானத்தில் இருந்த திரையை பார்த்து தான் அறிந்து கொண்டோம். நடந்தது என்ன என்பது அப்போது தான் எனக்கும் தெரியும். அதனால் இது குறித்து புத்தகத்தை எழுதியவர் தான் விளக்க வேண்டும்.
அணியின் மற்ற வீரர்கள் அறிவார்களா என்பது குறித்து வேறு யாராவது விளக்குவார்கள். இங்கிலாந்துடன் தொடர் தொடங்க உள்ள நிலையில் இது குறித்து நாம் பேசிக் கொண்டு உள்ளோம்” என்று ஸ்டார்க் கூறியுள்ளார்.
2018-ல் களத்தில் நடந்தது என்ன?
கடந்த 2018-ல் தென் ஆப்பிரிக்காவுக்கு ஆஸ்திரேலிய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. அப்போது கேப்டவுன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது, ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் பேன்கிராப்ட், பந்தில் மணல் காகிதத்தைப் பயன்படுத்தி சேதப்படுத்தியது கேமராவில் பதிவானது.
இதையடுத்து பந்தை சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது. இந்நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கவுரவத்தை குலைத்துவிட்டதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித் கேப்டன் பதவியிலிருந்தும், டேவிட் வார்னர் துணைக் கேப்டன் பதவியில் இருந்தும் விலகினர்.
மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய மூன்று வீரர்களுக்கும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா நீண்ட காலத் தடை விதித்தது. தடை காலம் முடிந்து இருவரும் (ஸ்மித், வார்னர்) சர்வதேச களத்துக்கு திரும்பினர். இந்நிலையில், இப்போது அது குறித்து கவாஜா தனது சுயசரிதையில் பேசி உள்ளார்.