

சிட்னி: ஆஸ்திரேலிய அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் ஆஷஸ் டெஸ்ட் தொடர், பிக்பாஷ் டி 20 லீக்கில் தீவிரமாக விளையாடியதைத் தொடர்ந்து முழங்கை மற்றும் தோள்பட்டை பகுதியில் காயம் அடைந்தார். இதன் காரணமாக அவரால், நடப்பு ஐபிஎல் தொடரின் தொடக்க ஆட்டங்களில் விளையாட முடியாமல் போனது.
தற்போது மிட்செல் ஸ்டார்க் காயத்தில் இருந்து குணமடைந்துள்ளதை தொடர்ந்து ஐபிஎல் தொடரில் விளையாட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது. 36 வயதான மிட்செல் ஸ்டார்க் கடந்த சீசனில் அவர், 11 ஆட்டங்களில் விளையாடி 14 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.
நடப்பு சீசனில் டெல்லி அணி 6 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 3 தோல்விகளுடன் 6 புள்ளிகளை பெற்றுள்ளது. டெல்லி அணியுடன் இன்று இணையும் மிட்செல் ஸ்டார்க் அந்த அணியின் மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் ஒரு வாரம் பந்துவீச்சு பயிற்சியை மேற்கொள்வார். வரும் மே 1-ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மிட்செல் ஸ்டார்க் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.