

சிட்னி: டெஸ்ட் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினின் சாதனையை ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் முறியடித்துள்ளார்.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெறுகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 384 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ரன் கணக்கை தொடங்காமலேயே ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழந்தார்.
இதன்மூலம், பென் ஸ்டோக்ஸை டெஸ்ட் போட்டிகளில் அதிகமுறை ஆட்டமிழக்கச் செய்த பந்து வீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை ஸ்டார்க் படைத்துள்ளார்.
இதற்கு முன்னதாக இந்திய வீரர் அஸ்வின் 13 முறை, ஸ்டோக்ஸை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். இந்நிலையில் மிட்செல் ஸ்டார்க் 14 முறை ஸ்டோக்ஸை ஆட்டமிழக்கச் செய்து இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினின் சாதனையை முறியடித்துள்ளார்.