

ஹாக்கி அரங்கில் போதிய பார்வையாளர்கள் இன்றி காலியாக இருந்த இருக்கைகள். | படம்: நா.தங்கரத்தினம் |
மதுரை: மதுரை ரேஸ் கோர்ஸ் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியை காண பார்வையாளர்கள் வராமல் நேற்று பெரும்பாலான கேலரிகள் வெறிச்சோடி காணப்பட்டது.
டிக்கெட் விநியோகம் செய்வதில் நீடிக்கும் குளறுபடிகளுக்கு தீர்வு காணவும், பார்வையாளர்களை வரவழைக்கவும் ஹாக்கி சம்மேளனம் நடவடிக்கை எடுக்காததால் இந்த நிலை நீடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை, மதுரையில் ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 6 பிரிவுகளில் 24 வெளிநாட்டு அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
கடந்த 2-ம் தேதி மதுரையில் நடந்த போட்டியில் இந்திய அணி, சுவிட்சர்லாந்த்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்திய அணி விளையாடியதால் இந்த போட்டியைக் காண, ரேஸ் கோர்ஸ் விளையாட்டு அரங்கில் அதிகளவில் கூட்டம் திரண்டதால் பலர் பாஸ் கையில் வைத்திருந்தும் போட்டியை பார்க்க முடியாமல் திரும்பிச் சென்றனர்.
இந்நிலையில் நேற்று காலை மதுரை ரேஸ் கோர்ஸ் விளையாட்டு அரங்கில் ஆஸ்திரியா-நமீபியா அணிகளும், அதன்பிறகு வங்காளதேசம்-ஓமன் அணிகளும் விளையாடின. 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட கேலரி பகுதிகள் பார்வையாளர்கள் வராமல் வெறிச்சோடி காணப்பட்டன.
போட்டியை பார்க்க கூட்டம் இல்லாமல் இருக்கக்கூடாது என்பதற்காக பள்ளி மாணவர்கள் அழைத்துவரப்பட்டு பார்வையாளர்களாக அமர வைக்கப்பட்டனர்.
பொதுமக்கள், விளையாட்டு ஆர்வலர்கள், பெரும்பாலும் போட்டியை பார்க்க வரவில்லை. டிக்கெட் கிடைப்பதில் நீடிக்கும் குளறுபடிகள், ஹாக்கி சம்மேளனம் மற்றும் போலீஸ் கெடுபிடிகள், போன்றவற்றால் போட்டியைக் காண பொதுமக்கள், விளையாட்டு ஆர்வலர்கள் தற்போது ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து ஹாக்கி ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘ரேஸ்கோர்ஸ் விளையாட்டு அரங்கில் நடக்கும் போட்டியைக் காண, ஆன்லைன் பாஸ் (டிக்கெட்) வைத்திருப்போர், பள்ளிகளில் இருந்து அழைத்துவரப்பட்ட மாணவர்கள் மட்டுமே இதுவரை அனுமதிக்கப்பட்டனர். போட்டிக்கான டிக்கெட் செயலியில் விற்று முடிந்துவிட்டதாக வருவதால் பலரால் போட்டியைக் காண முடியவில்லை.
டிக்கெட் இல்லாமல் வருபவர்களை மைதானத்துக்குள் அனுமதிக்கவில்லை. கடந்த 2-ம் தேதி நடந்த இந்திய அணியின் போட்டியை தவிர மற்ற போட்டிகளை பார்க்க பொதுமக்கள் வரவில்லை. நேற்று நடந்த போட்டிகளைப் பார்க்க, கட்டுப்பாடுகள், கெடுபிடிகள் இல்லாமல் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால், கடை விரித்தார் கொள்வார் இல்லை என்ற கதையாக, கடந்த போட்டிகளில் ஏற்பட்ட மோசமான அனுபவத்தால் பார்வையாளர்கள் வழக்கம்போல் போட்டியை பார்க்க வரவில்லை. டிக்கெட் இல்லாவிட்டாலும் அனுமதிப்போம் என்று ஹாக்கி சம்மேளனம் வெளிப்படையாக அறிவிக்கவி்ல்லை.
இதனால் ஆர்வம் இருந்தும் மைதானத்துக்கு வர ரசிகர்கள் தயங்குகின்றனர். டிக்கெட் வழங்குவதில் நீடிக்கும் குளறுபடிகள், ஹாக்கி விளையாட்டு அரங்கில் காட்டப்படும் கெடுபிடிகள், பார்வையாளர்களை அங்கும், இங்குமாக விரட்டிவிடுவது போன்றவற்றுக்கு தீர்வு கண்டாலே மதுரையில் நடக்கும் ஜூனியர் உலகக் கோப்பை போட்டியை காண அனைவரும் வருவார்கள்’’ என்றனர்.