

ஸ்ரீராம் பாலாஜி
புதுடெல்லி: டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடருக்கான தகுதி சுற்றில் இந்திய அணி வரும் 2026-ம் ஆண்டு பிப்ரவரி 7 மற்றும் 8-ம் தேதிகளில் நெதர்லாந்துடன் மோதுகிறது. இந்த போட்டி பெங்களூருவில் நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த போட்டிக்கான வீரர்களை அகில இந்திய டென்னிஸ் சங்கம் அறிவித்துள்ளது. இதன்படி ஒற்றையர் போட்டியை சுமித் நாகல் வழி நடத்த உள்ளார். அதே நேரத்தில் இரட்டையர் பிரிவில் அனுபவம் வாய்ந்த யுகி பாம்ப்ரியுடன் தட்சிணேஸ்வர் சுரேஷ், கரண் சிங் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
அதேவேளையில் அனுபவம் வாய்ந்த இரட்டையர் பிரிவு வீரரான ஸ்ரீராம் பாலாஜி அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். நீண்ட கால திட்டத்தின் ஒரு பகுதியாக இளம் வீரர்களை கருத்தில் கொண்டு தேர்வுக் குழு இந்த முடிவை மேற்கொண்டுள்ளது.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ராஜ்பால் கூறும்போது, “முன்னோக்கிப் பார்க்க வேண்டிய நேரம் இது என்று தேர்வுக் குழு உணர்ந்துள்ளது. ஸ்ரீராம் பாலாஜி இந்திய டென்னிஸுக்கு மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கி வருகிறார். ஆனால் அவர், கொஞ்சம் மென்மையாக மாறிவிட்டார். இதனால் அணியை முன்னோக்கி அழைத்துச் செல்லக்கூடிய வீரர்களை நாம் உருவாக்க வேண்டும்” என்றார்.
அணி விவரம்: சுமித் நாகல், தட்சிணேஸ்வர் சுரேஷ், கரண் சிங், யுகி பாம்ப்ரி, ரித்விக் போலி பாலி.
மாற்று வீரர்கள்: ஆர்யன் ஷா, அனிருத் சந்திரசேகர், திக் விஜய் சிங்.