

கொழும்பு: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக நீதிமன்ற அனுமதியை இலங்கை வீரர் நுவான் துஷாரா நாடியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருப்பவர் நுவான் துஷாரா. இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் விளையாட ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார் துஷாரா. ஆனால், அவர் உடற்தகுதித் தேர்வில் தோல்வி அடைந்ததால் அவருக்கு ஆட்சேபம் இல்லாத சான்றிதழ் (என்ஓசி) வழங்கப்படவில்லை.
இந்த சான்றிதழ் இருந்தால்தான் அவர் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க முடியும் என்ற நிலை உள்ளது. இதையடுத்து கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் துஷாரா. அதில் அவர் கூறும்போது, “நான் 2022-ம் ஆண்டு முதல் இலங்கை அணிக்காக விளையாடி வருகிறேன். இதுவரை 30 சர்வதேச டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளேன்.
இலங்கை கிரிக்கெட் வாரியத்துடனான எனது ஒப்பந்தம் மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. மேலும், வாரியத்துடன் ஒப்பந்தத்தைத் தொடர நான் விரும்பவில்லை. என்ஓசி சான்றிதழை தராததால் நான் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க முடியவில்லை. எனவே, ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நான் விளையாட எனக்கு அனுமதியை பெற்றுத் தரவேண்டும்.
உடற்தகுதி தேர்வில் தோல்வியுற்றதை நீதிமன்றம் நிராகரிக்கவேண்டும்” என்றார். இந்நிலையில் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம் அடுத்தகட்ட விசாரணையில் வரும் 9-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது. கடந்த 2025-ம் ஆண்டில் ஆர்சிபி அணியால் ரூ.1.6 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார் துஷாரா. அந்த சீசனில் அவர் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடினார்.