

சென்னை: எஸ்டிஏடி ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடர் சென்னையில் இன்று (9-ம் தேதி) தொடங்குகிறது.
வரும் 14-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் போட்டியை நடத்தும் இந்தியா, ஈரான், ஜப்பான், மலேசியா, கொரியா, ஹாங் காங், எகிப்து, தென் ஆப்பிரிக்கா, போலந்து, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, பிரேசில் ஆகிய 12 நாடுகள் கலந்து கொள்கின்றன.
போட்டிகள் எஸ்டிஏடி அகாடமி மைதானம், எக்ஸ்பிரஸ் அவென்யூ மால் ஆகியவற்றில் நடத்தப்பட உள்ளன. இந்த போட்டியை நடத்துவதற்காக தமிழக அரசு ரூ.3.30 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது.
இந்தத் தொடருக்கான 4 பேர் கொண்ட இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த ஜோஷ்னா சின்னப்பா, அபய் சிங், வேலவன் செந்தில் குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களுடன் டெல்லியை சேர்ந்த அனஹத் சிங்கும் அணியில் உள்ளார். அபய் சிங், இந்திய ஸ்குவாஷில் முதல்
நிலை வீரராக உள்ளார். அதேவேளையில் அனஹத் சிங், முதல் நிலை வீராங்கனையாக வலம் வருகிறார். ஜோஷ்னா சின்னப்பா, காமன்வெல்த் விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
வேலவன் செந்தில் குமார் முதன்முறையாக உலகக் கோப்பை தொடரில் விளையாட உள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் பெற்றிருந்தது. அதேவேளையில் எகிப்து தங்கப் பதக்கமும், மலேசியா வெள்ளிப் பதக்கமும் வென்றிருந்தன.
போட்டிகள் லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடத்தப்படுகிறது. தொடரில் கலந்து கொண்டுள்ள 12 அணிகளும் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 3 அணிகள் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் இடம் பெற்றுள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். ஒரு மோதலில் 4 ஆட்டங்கள் இடம் பெறும். ஒவ்வொரு அணியிலும் 2 வீரர்கள், 2 வீராங்கனைகள் இடம் பெறுவார்கள். ஒரு செட் 7 புள்ளிகளை கொண்டதாக இருக்கும். பெஸ்ட் ஆஃப் 5 அடிப்படையில் செட்கள் அமையும்.
லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறும். கால் இறுதி ஆட்டங்கள் 12-ம் தேதியும், அரை இறுதி ஆட்டங்கள் 13-ம் தேதியும் நடைபெறுகின்றன. சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்? என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி 14-ம் தேதி நடைபெறுகிறது.
இந்தியா ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் பிரேசில், சுவிட்சர்லாந்து அணிகளும் இடம்பெற்றுள்ளன. தொடக்க நாளான இன்று இந்தியா தனது முதல் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்துடன் மோதுகிறது. இந்த ஆட்டம் மாலை 6 மணிக்கு எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடைபெறுகிறது.
சென்னையில் நடைபெற உள்ள 5-வது உலகக் கோப்பை தொடர் இதுவாகும். 1996 மற்றும் 1999-ம் ஆண்டு நடத்தப்பட்ட தொடர்களில் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. 2011 மற்றும் 2023-ம் ஆண்டு நடத்தப்பட்ட தொடர்களில் எகிப்து அணி வாகை சூடியிருந்தது. அந்த அணி ஹாட்ரிக் பட்டம் வெல்லும் முனைப்புடன் களமிறங்க உள்ளது.