

குவாஹாட்டி: இந்திய அணிக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 408 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றி தொடரை வென்று சாதனை படைத்தது.
குவாஹாட்டி பர்சபாரா மைதானத்தில் நடைபெற்று வந்த இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி 489 ரன்களும், இந்திய அணி 201 ரன்களும் எடுத்தன. இந்திய அணிக்கு பாலோ-ஆன் கொடுக்காமல் 288 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது.
549 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய அணி 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 15.5 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 27 ரன்கள் எடுத்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 13, கே.எல்.ராகுல் 6 ரன்களில் ஆட்டமிழந்தனர். சாய் சுதர்சன் 2, குல்தீப் யாதவ் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி சைமன் ஹார்மரின் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 63.5 ஓவர்களில் 140 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. குல்தீப் யாதவ் 5, துருவ் ஜூரெல் 2, கேப்டன் ரிஷப் பந்த் 13 ரன்களில் சைமன் ஹார்மர் பந்தில் நடையை கட்டினார். 139 பந்துகளை சந்தித்து 14 ரன்கள் சேர்த்த சாய் சுதர்சன் செனுரன் முத்துசாமி பந்தில் வெளியேறினார். வாஷிங்டன் சுந்தர் 16, நிதிஷ் குமார் ரெட்டி 0 ரன்களில் சைமன் ஹார்மர் பந்தில் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர்.
ஒருமுனையில் விக்கெட்கள் சரிந்தாலும் அதிரடியாக விளையாடிய ரவீந்திர ஜடேஜா 87 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் எடுத்த நிலையில் கேசவ் மஹாராஜ் பந்தில் ஸ்டெம்பிங் ஆனார். கடைசி வீரராக முகமது சிராஜ் ரன் ஏதும் எடுக்காத நிலையில் கேசவ் மஹாராஜ் பந்தில் நடையை கட்டினார். தென் ஆப்பிரிக்க அணி சார்பில் சைமன் ஹார்மர் 23 ஓவர்களை வீசி 6 மெய்டன்களுடன் 37 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தினார். கேசவ் மஹாராஜ் 2, செனுரன் முத்துசாமி ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
408 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றி தொடரை வென்றது. கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் அந்த அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. ஆட்ட நாயகனாக மார்கோ யான்சன் தேர்வானார். அவர், பேட்டிங்கில் முதல் இன்னிங்ஸில் 96 ரன்கள் விளாசியிருந்தார். மேலும் பந்துவீச்சில் 6 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.
அதேவேளையில் 2-வது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் கைப்பற்றியிருந்தார். தொடர் நாயகனாக சைமன் ஹார்மர் தேர்வு செய்யப்பட்டார். அவர், இந்த தொடரில் 17 விக்கெட்களை வேட்டையாடி இருந்தார். தென் ஆப்பிரிக்க அணி 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது. கடைசியாக 1999-2000-ம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்க அணி 2-0 என வென்றிருந்தது.
குவாஹாட்டி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இது ரன்கள் வித்தியாசத்தின் அடிப்படையில் இந்திய அணியின் மோசமான தோல்வியாக அமைந்தது. இதற்கு முன்னர் 2004-ம் ஆண்டு நாக்பூர் டெஸ்டில் இந்திய அணி 342 ரன்களில் தோல்வி அடைந்திருந்தது.
3-வது முறையாக தோல்வி: சொந்த மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை முழுமையாக பறிகொடுப்பது இது 3-வது முறையாகும். கடந்த ஆண்டு நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 0-3 என இழந்தது. இதற்கு முன்னதாக 1999-2000-ம் ஆண்டில் தென் ஆப்பிரிக்க அணியிடம் 0-2 என தோல்வி கண்டிருந்தது. தற்போதும் தென் ஆப்பிரிக்க அணியிடம் அதேபோன்ற தோல்வியை பெற்றுள்ளது.
கேட்ச்சில் மார்க்ரம் சாதனை: குவாஹாட்டி டெஸ்ட் போட்டியின் தென் ஆப்பிரிக்க அணியின் எய்டன் மார்க்ரம் 9 கேட்ச்கள் எடுத்து சாதனை படைத்தார்.இதற்கு முன்னர் இந்தியாவின் அஜிங்க்ய ரஹானே 2015-ம் காலே நகரில் இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்டில் 8 கேட்ச்கள் எடுத்திருந்ததே சாதனையாக இருந்தது. இதை தற்போது எய்டன் மார்க்ரம் முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
11 வெற்றிகளை குவித்த பவுமா: கேப்டனாக முதல் 12 டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளை குவித்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் தெம்பா பவுமா. அவர், 12 டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து 11-வது வெற்றியை பெற்றுள்ளார்.
5-வது இடத்துக்கு சரிவு: குவாஹாட்டி டெஸ்ட் போட்டியில் 408 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த இந்திய அணி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. தற்போது இந்திய அணி 48.15 வெற்றி சராசரி புள்ளிகளுடன் உள்ளது. இதனால் 2027-ம் ஆண்டு நடைபெறும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இந்திய அணி 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 4 தோல்வி, ஒரு டிராவை பதிவு செய்துள்ளது. இந்திய அணி தனது அடுத்த டெஸ்ட் தொடரை 2026-ம் ஆகஸ்ட் மாதம் இலங்கை அணிக்கு எதிராக விளையாடுகிறது. இதைத் தொடர்ந்து அக்டோபர்-நவம்பரில் நியூஸிலாந்து அணிக்கு எதிராகவும் டெஸ்டில் மோதுகிறது.
2-வது இடத்துக்கு முன்னேற்றம்: இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என வென்ற தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் 75 சதவீத வெற்றி புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. ஆஸ்திரேலிய அணி 100 சதவீத வெற்றி புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது.