

முலான்பூர்: இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டி இன்று இரவு 7 மணிக்கு முலான்பூரில் உள்ள மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் கட்டாக்கில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் போட்டியில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது.
இந்த ஆட்டத்தில் 176 ரன்கள் இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்க அணி 12.3 ஓவர்களில் 74 ரன்களுக்கு ஆட்டமிழந்து படுதோல்வியை சந்தித்தது. 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில் 2-வது போட்டி முலான்பூரில் இன்று நடைபெறுகிறது.
முதல் ஆட்டத்தில் சிவப்பு மண் ஆடுகளத்தில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான அபிஷேக் சர்மா, ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் விரைவிலேயே ஆட்டமிழந்த நிலையில் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியாக அதிரடியாக விளையாடி 28 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் விளாசி இந்திய அணி வலுவான இலக்கை கொடுக்க உதவியாக இருந்தார்.
திலக் வர்மா, அக்சர் படேல் ஆகியோரும் உரிய பங்களிப்பை வழங்கியிருந்தனர். இவர்களிடம் இருந்து மேலும் உயர்மட்ட செயல் திறன் வெளிப்படக்கூடும். அதேபோன்று முதல் ஆட்டத்தில் 17 ரன்களில் ஆட்டமிழந்த அபிஷேக் சர்மாவும் மட்டையை சுழற்றுவதில் முனைப்பு காட்டக்கூடும்.
அதேவேளையில் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள ஷுப்மன் கில் கடந்த ஆட்டத்தில் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அதேபோன்று கடந்த ஓராண்டாக பேட்டிங்கில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத சூர்யகுமார் யாதவும் ரன்கள் குவித்தாக வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளார்.
இவர்கள் இருவரும் மீண்டும் பார்முக்கு திரும்பினால் அணியின் பலம் அதிகரிக்கும். கட்டாக் போட்டியில் இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் அச்சமற்ற அணுகுமுறையை வெளிப்படுத்தியது. பந்துவீச்சில் ஜஸ்பிரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங் வேகக்கூட்டணி தொடக்கத்திலேயே தென் ஆப்பிரிக்க அணியின் பேட்ஸ் மேன்களுக்கு அழுத்தம் கொடுத்தது.
இதேபோன்று நடுவரிசை ஓவர்களில் வருண் சக்ரவர்த்தி, அக்சர் படேல், ஹர்திக் பாண்டியா ஆகியோரும் பலம் சேர்த்தனர். இவர்கள் மீண்டும் ஒரு முறை தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் வரிசைக்கு நெருக்கடி கொடுக்கக்கூடும்.
தென் ஆப்பிரிக்க அணி முதல் போட்டியில் பேட்டிங்கில் ஒட்டுமொத்த சரிவை சந்தித்து இருந்தது. எய்டன் மார்க்ரம், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டெவால்ட் பிரேவிஸ், மார்கோ யான்சன் ஆகியோரை தவிர மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்கை ரன்களை கடக்கவில்லை.
இந்த தோல்வியில் இருந்து மீண்டு வருவதற்கான வழியை எய்டன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி கண்டறியக்கூடும்.
போட்டி நடைபெறும் முலான்பூரில் குளிர்ந்த வானிலை நிலவுவதால் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியில் பெரிய அளவிலான மாற்றங்கள் இருக்க வாய்ப்பு இல்லை. மேலும் இந்த மைதானத்தில் சர்வதேச டி20 போட்டி நடைபெறுவது இதுவே முதன்முறையாகும்.