

துபாய்: மகளிர் ஒருநாள் கிரிக்கெட் பேட்டர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா 790 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார்.
சமீபத்தில் முடிவடைந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் மந்தனா 58 மற்றும் 31 ரன்கள் எடுத்திருந்தார். தென் ஆப்பிரிக்காவின் லாரா வால்வார்ட் 782 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ஆஸ்திரேலியாவின் பெத் மூனி 2 இடங்கள் முன்னேறி 749 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஆஸ்திரேலியாவின் அலிசா ஹீலி 2 இடங்கள் முன்னேறி 744 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளார். அதேவேளையில் ஆஷ்லே கார்ட்னர் 724 புள்ளிகளுடன் 2 இடங்களை இழந்து 5-வது இடத்தை பிடித்துள்ளார்.
இந்திய அணியின் கேப்டனான ஹர்மன்பிரீத் கவுர் 4 இடங்கள் முன்னேறி 652 புள்ளிகளுடன் 9-வது இடத்தை எட்டியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அவர், 2 அரை சதங்கள் அடித்திருந்தார். நட்சத்திர வீராங்கனையான ஜெமிமா ரோட்ரிக்ஸ் 4 இடங்களை இழந்து 11-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.