

குஜராத் டைட்டன்ஸ் பலமே அணியின் தெளிவான கட்டமைப்புதான். மற்ற அணிகளைப் போல ஏலத்தில் பெரிய பெயர்களைத் தேடி ஓடாமல், ஏற்கெனவே உள்ள தங்களின் வலுவான அடித்தளத்தை நம்பி அவர்கள் செயல்படுகிறார்கள். ஏலத்துக்கு முன்பே 20 வீரர்களைத் தக்கவைத்தது என்பது அவர்களின் திட்டமிடலுக்கு சிறந்த சான்று. மீதமுள்ள ஐந்து இடங்களை நிரப்புவதற்கு மட்டுமே அவர்கள் ஏலத்தைப் பயன்படுத்தினர்.
இதில், ஜேசன் ஹோல்டர் அனுபவம் வாய்ந்த ஆல்-ரவுண்டராக அணியின் சமநிலையை அதிகரிக்கிறார். டாம் பான்டன் அதிரடி பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் ஆப்ஷனாக இணைகிறார். இடது கை வேகப்பந்து வீச்சாளரான லூக் வுட் பவர்பிளேயில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர். இளம் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களான அசோக் சர்மா, பிரித்விராஜ் யர்ரா ஆகியோர் பெஞ்ச் பலத்திற்காக சேர்த்துள்ளனர்.
பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா, கேப்டன் ஷுப்மன் கில் கூட்டணி, தேவையில்லாத ஆர்ப்பாட்டங்களை விட தங்களுக்குத் தெரிந்த வெற்றிகரமான ஃபார்முலாவையே இந்த சீசனிலும் பின்பற்றக்கூடும். வலுவான டாப் ஆர்டர், நிதானம் காட்டக்கூடிய நடுவரிசை, இறுதிக்கட்ட ஓவர்களில் வேகம் காட்டக்கூடிய பேட்ஸ்மேன்கள், வேகப்பந்து வீச்சு தாக்குதல் கூட்டணி, நடு ஓவர்களில் ரன் குவிப்பை கட்டுப்படுத்தக்கூடிய சுழற்பந்து வீச்சாளர்கள் என அனைத்து அடிப்படைகளையும் குஜராத் டைட்டன்ஸ் அணி பூர்த்தி செய்துள்ளது.
எல்லாற்றுக்கும் மேலாக கடந்த ஐசிசி டி20 உலகக் கோப்பையில் தொடரில் ஷுப்மன் கில் நீக்கப்பட்டு இருந்தார். நவீன கால டி20 ஆட்டங்களுக்கு தகுந்தபடியான ஸ்டிரைக் இல்லாததாலும், பவர்பிளேவில் ரன் குவிக்க சிரமப்பட்டதாலும் இந்திய அணியில் தனது இடத்தை ஷுப்மன் கில் இழந்திருந்தார். இந்த பலவீனத்தை சரிசெய்து டி 20-ல் தனது முத்தியை பதிக்ககில் முயற்சிக்கக்கூடும்.
பலம்: 2025-ம் ஆண்டு சீசனில் ஆரஞ்சு தொப்பியை வென்ற சாய் சுதர்சன் (759 ரன்கள்) மற்றும் ஷுப்மன் கில் (650 ரன்கள்) டாப் ஆர்டர் பேட்டிங்கில் பலம் சேர்க்கக்கூடும். முகமது சிராஜ், காகிசோ ரபாடா, பிரசித் கிருஷ்ணா (கடந்த சீசனில் 25 விக்கெட்டுகள்) ஆகியோரை உள்ளடக்கிய வேகக்கூட்டணி பவர்-பிளே மற்றும் டெத் ஓவர்களில் எதிரணிக்கு சவால் அளிக்கக்கூடும். டெவாட்டியா, ஷாருக்கான், கிளென் பிலிப்ஸ் ஆகியோர் இறுதிக்கட்ட ஓவர்களில் அதிரடியாக விளையாடும் திறன் கொண்டவர்கள்.
பலவீனம்: ரஷீத் கானின் ஃபார்ம் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. சமீபகாலமாக டி 20 போட்டிகளில் அவரது பந்துவீச்சை பேட்ஸ்மேன்கள் எளிதாக கணித்து விளையாடி வருகின்றனர். கடந்த 2025-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ரஷீத் கான் 10 விக்கெட்களுக்கும் குறைவாக கைப்பற்றிருந்தார்.
ஐபிஎல் வரலாற்றில் அவரது மோசமான செயல் திறனாக இது அமைந்திருந்தது. அவர், மீண்டும் தனது பழைய ஃபார்முக்கு வருவது அவசியம். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜாஸ் பட்லர் கடந்த முறை 538 ரன்கள் எடுத்திருந்தாலும், சமீபத்திய டி20 போட்டிகளில் அவர், ரன்கள் குவிக்க சிரமப்பட்டு வருகிறார்.
ஐசிசி டி 20 உலகக் கோப்பையில் அவர், 8 ஆட்டங்களில் 87 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தார். வெளிநாட்டு வீரர்களில் ஜேசன் ஹோல்டர், கிளென் பிலிப்ஸ், ரஷித் கான், காகிசோ ரபாடா, ஜாஸ் பட்லர், லூக் வுட், டாம் பேன்டன் ஆகியோரில் இருந்து 4 பேரை விளையாடும் லெவனில் தேர்ந்தெடுப்பது சவாலாக இருக்கக்கூடும்.
செயல் திறன்:
2022: சாம்பியன்
2023: 2-வது இடம் (சிஎஸ்கேவிடம் தோல்வி)
2024: 8-வது இடம்
2025: 4-வது இடம் - (எலிமினேட்டரில் தோல்வி)
அணி விவரம்:
பேட்ஸ்மேன்கள்: ஷுப்மன் கில், சாய் சுதர்சன், ஜாஸ் பட்லர், குமார் குஷாக்ரா, அனுஜ் ராவத், டாம் பேன்டன், கிளென் பிலிப்ஸ், ஷாருக்கான். பந்துவீச்சாளர்கள்: ரஷித் கான், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, காகிசோ ரபாடா, லூக் வுட், இஷாந்த் சர்மா, மானவ் சுதர், குர்னூர் சிங் பிரார், அசோக் சர்மா, பிரித்விராஜ் யர்ரா.
ஆல்ரவுண்டர்கள்: வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர், ராகுல் டெவாட்டியா, நிஷாந்த் சிந்து, முகமது அர்ஷத் கான், ஜெயந்த் யாதவ், ஜேசன் ஹோல்டர்.
மோதல்கள்
மார்ச் 31 | பஞ்சாப் கிங்ஸ் | முலான்பூர் | இரவு 7.30
ஏப்ரல் 4 | ராஜஸ்தான் ராயல்ஸ் | அகமதாபாத் | இரவு 7.30
ஏப்ரல் 8 | டெல்லி கேப்பிடல்ஸ் | டெல்லி | இரவு 7.30
ஏப்ரல் 12 | லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் | லக்னோ | பிற்பகல் 3.30