

இந்திய வீரரை ஸ்ரேயஸ் ஐயர்
சென்னை: அடுத்த சில நாட்களில் டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்க உள்ளது. இந்நிலையில், நியூஸிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் வகையில் இந்திய அணியில் மீண்டும் இடம்பெற்றுள்ளார் ஸ்ரேயஸ் ஐயர்.
கடைசியாக கடந்த 2023-ல் இந்திய அணிக்காக சர்வதேச டி20 போட்டியில் ஸ்ரேயஸ் ஐயர் விளையாடி இருந்தார். இந்நிலையில், அணிக்குள் மீண்டும் அவர் கம்பேக் கொடுத்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அவர் இடம்பெறவில்லை. இருப்பினும் நியூஸிலாந்து உடனான டி20 தொடரில் (முதல் 3 ஆட்டங்களில்) அவர் விளையாட உள்ளார். அதுவும் டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்க வெகு சில நாட்களே உள்ள நிலையில் திலக் வர்மாவுக்கு மாற்றாக அவர் அணியில் இடம்பிடித்தது கவனம் பெற்றுள்ளது.
டி20 அணியில் கம்பேக்: 31 வயதான ஸ்ரேயஸ் ஐயர், இந்திய அணிக்காக 14 டெஸ்ட், 73 ஒருநாள் மற்றும் 51 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். டாப் ஆர்டரில் ஆடும் பேட்ஸ்மேன். இந்திய அணியின் மேட்ச் வின்னர்களில் ஒருவர். சிறந்த ஃபீல்டராக அறியப்படுகிறார். காயம் மற்றும் அணியில் இடம்பெற நிலவும் கடும் போட்டி காரணமாக டி20 அணியில் விளையாடும் வாய்ப்பை அவர் இழந்தார்.
இருப்பினும் ஐபிஎல் மற்றும் உள்நாட்டில் நடைபெறும் டி20 கிரிக்கெட் தொடர்களில் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் ஸ்ரேயஸ் அபாரமாக செயல்பட்டுள்ளார். 2024 ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணியை கேப்டனாக வழிநடத்தி சாம்பியன் பட்டம் வெல்லச் செய்தார். கடந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியை இறுதிப் போட்டி வரை முன்னேறச் செய்தார். கடந்த சீசனில் 604 ரன்களை அவர் எடுத்திருந்தார். இதில் அவரது பேட்டிங் சராசரி 50.33 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 175.07 என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய தொடரில் அவர் காயமடைந்தார். அதன் பின்னர் அண்மையில் அணிக்கு திரும்பிய அவர், நியூஸிலாந்து உடனான ஒருநாள் தொடரில் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இருப்பினும் டி20 பார்மெட்டில் அவரது ஆட்டத்தின் ‘மோட்’ வேறு ரகமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுவினர் அவருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளனர்.
டி20 உலகக் கோப்பை அணியில் இடம்பெறுவாரா? - இந்திய அணியின் இளம் வீரரான திலக் வர்மா, எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்குள் நூறு சதவீத மேட்ச் ஃபிட்னஸை எட்டுவாரா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. அதனால்தான் அவருக்கு மாற்று ஆப்ஷனாக ஸ்ரேயஸ் ஐயர் அணியில் இடம்பெற்றுள்ளார்.
இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் மூன்றாவது இடத்தில் விளையாடி வருகிறார். கடந்த 2025-ம் ஆண்டில் இந்திய அணிக்காக 18 இன்னிங்ஸ் ஆடி 567 ரன்கள் எடுத்தார். இதில் நான்கு அரை சதங்களை விளாசினார். கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் 53 பந்துகளில் 69 ரன்களை விளாசினார். அதன் மூலம் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன் பின்னர் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் உடனான டி20 தொடரிலும் விளையாடி இருந்தார். இந்நிலையில் உள்ளூர் கிரிக்கெட் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய போது அவர் காயமடைந்தார்.
அவருக்கு மாற்று ஆப்ஷனாக ஸ்ரேயஸ் ஐயரை இந்திய தேர்வுக்குழு இப்போது பரிசீலித்து வருகிறது. டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆடுவது உறுதியாகி உள்ளது. மற்றொரு தொடக்க ஆட்டக்காரராக இஷான் கிஷன் அணியில் உள்ளார். பேட்டிங் ஆர்டரில் நான்காவது இடத்தில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் விளையாடுவார். பின்வரிசையில் ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், அக்சர் படேல் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில், திலக் வர்மா இல்லாத பட்சத்தில் ஸ்ரேயஸ் ஐயர் அந்த இடத்தில் ஆடும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக பார்க்கப்படுகிறது. அந்த ரோலுக்கு அவர் கச்சிதமாக பொருந்தினாலும் நேரமும் காலமும் அவருக்கு கைகொடுக்க வேண்டி உள்ளது.