

ஸ்ரேயஸ் ஐயர்
மும்பை: இந்திய கிரிக்கெட் அணி இம்மாத இறுதியில் அயர்லாந்தில் சுற்றுப் பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக 2 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்த ஆட்டங்கள் ஜூன் 26 மற்றும் 28-ம் தேதிகளில் பெல்ஃபாஸ்ட் நகரில் நடைபெற உள்ளது.
இதைத் தொடர்ந்து இங்கிலாந்து செல்லும் இந்திய அணி அங்கு 5 டி20 ஆட்டங்கள், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடர் ஜூலை 1-ல் தொடங்குகிறது. இந்த தொடர்களுக்கான இந்திய அணி தேர்வு நேற்று தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தலைமையில் நடைபெற்றது.
கேப்டனாக ஸ்ரேயஸ் ஐயர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 15 வயதாகும் வைபவ் சூர்யவன்ஷியும் சேர்க்கப்பட்டுள்ளார். இதன் வாயிலாக இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வான இளம் வயது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் சூர்யவன்ஷி (15 வயது 71 நாட்கள்). இந்த வகையில் இதற்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர் 16 வயது 205 நாட்களில் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமாகி இருந்தார்.
ஐபிஎல் தொடரில் 2024-ம் ஆண்டு சீசனில் கொல்கத்தா அணியின் கேப்டனாக அந்த அணிக்கு கோப்பையை வென்று கொடுத்திருந்தார் ஸ்ரேயஸ் ஐயர். தொடர்ந்து அடுத்த சீசனில் பஞ்சாப் அணியின் கேப்டனாக அந்த அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றிருந்தார். சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் தொடரிலும் ஸ்ரேயஸ் ஐயர் சிறந்த திறனை வெளிப்படுத்தியிருந்தார்.
இதன் அடிப்படையிலேயே அவரை, தேர்வுக்குழுவினர் கேப்டனாக நியமித்துள்ளனர். அதேவேளையில் சூர்யகுமார் யாதவ் கேப்டன் பொறுப்பில் இருந்தும் அணியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். டி 20 உலகக் கோப்பையை சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி வென்றிருந்தது. எனினும் கடந்த 18 மாதங்களாக அவர், பேட்டிங்கில் பார்மின்றி தவித்து வந்ததால் தற்போது அணியில் தனக்கான இடத்தை பறிகொடுத்துள்ளார். மேலும் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவும் சேர்க்கப்படவில்லை.
15 வயதாகும் சூர்யவன்ஷி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஒரு சதம், 5 அரை சதங்களுடன் 776 ரன்கள் குவித்திருந்தார். அவரது ஸ்டிரைக் ரேட் 237.30 ஆக இருந்தது. துணை கேப்டனாக திலக் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வேகப்பந்து வீச்சாளர் பிரின்ஸ் யாதவுக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. காயத்தில் இருந்து மீண்டுள்ள ஆல்ரவுண்டரான ஹர்ஷித் ராணாவும் அணிக்கு திரும்பி உள்ளார்.
வரும் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் ஜப்பானில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டு போட்டியில் கலந்துகொள்ளும் இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா சேர்க்கப்பட்டுள்ளார். அதேவேளையில் அவருக்கு அயர்லாந்து, இங்கிலாந்து தொடர்களில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
அயர்லாந்து, இங்கிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணி:
ஸ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், வைபவ் சூர்யவன்ஷி, இஷான் கிஷன், ஷிவம் துபே, திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய், முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், பிரின்ஸ் யாதவ்.